கடந்த 2000-ம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தொட்டகாஜனூரில் பண்ணை வீட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரையும் அவருடன் இருந்த மூவரையும் சந்தன வீரப்பன் தனது கூட்டாளிகளோடு இணைந்து கடத்திச் சென்றார்.
ராஜ்குமாரையும் மற்றும் அவருடன் கடத்தி வரப்பட்டவர்களையும் காட்டுக்குள் தனது பாதுகாப்பில் வைத்திருந்த வீரப்பன் அவர்களை விடுவிக்கப் பத்து நிபந்தனைகளை விதித்தார். இதையடுத்து நிலைமை சிக்கலானது.
வீரப்பனுடன் பேச்சு வார்த்தையினை நடத்தி ராஜ்குமாரையும் மற்றவர்களையும் மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் தங்களது சிறப்புத் தூதர்களாக நக்கீரன் வாரமிருமுறை இதழ் ஆசிரியர் கோபால், முதன்மைச் செய்தியாளர் சிவசுப்ரமணியம், செய்தியாளர் சுப்பு ஆகியோரைக் காட்டுக்குள்ளாக அனுப்பி வைத்தன.
இந்தக் குழுவினரும் காட்டுக்குள்ளாகச் சென்று வீரப்பனுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர். ஆனாலும், வீரப்பன் அசைந்து கொடுக்காததால் இந்தப் பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாமல் நாட்கள் நகர்ந்து வந்தன.
இந்த நிலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், புதுவையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சுகுமாரன், பேராசிரியர் கல்யாணி ஆகியோரைக் கொண்ட மற்றொரு குழுவும் வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தி ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் இறங்கியது.
இந்த முயற்சிகளைத் தொடர்ந்து 108 நாட்கள் கழிந்த நிலையில் ராஜ்குமாரையும், மற்றவர்களையும் விடுவிக்கச் சம்மதித்த வீரப்பன் அவர்களை மீட்பு முயற்சியில் இறங்கிய இரண்டாவது குழுவினருடன் 2000ஆம் ஆண்டு நவம்பர் 15 தேதியன்று பத்திரமாக அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து கர்நாடகத்தில் தோன்றியிருந்த பதட்டம் வெய்யிலிடைப் பணியாகக் கரைந்து இயல்நிலை திரும்பியது. ராஜ்குமார் மீட்பில் பங்காற்றிய அனைவரையும் அழைத்த அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
சந்தன வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியது தொடர்பான வழக்கு கோபிச்செட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜரானார். கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் கடத்தல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் வீரப்பன், சேத்துக்குழி கோவிந்தன், சந்திரகவுடர் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. தொட்டகாஜனூர் பகுதியினைச் சேர்ந்த மல்லு என்பவரும் இறந்து விட்டார். இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களான மாறன், கோவிந்தராசு, அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம், அமிர்தலிங்கம், ரமேஷ், கல்மண்டிபுரம் ராமு, நாகராஜன், புட்டுசாமி, பசவண்ணா ஆகிய ஒன்பது போரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஒருமுறை கூட சாட்சி அளிக்கவில்லை. குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சிகள் இல்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.