குட்கா லஞ்ச ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் சந்தேக நிழல் படிந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைப் பதவி நீக்கம் செய்யாதது ஏன்? என இன்று தான் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வினா எழுப்பியுள்ளார்.
இன்று வைகோ விடுத்துள்ள அறிக்கை.
தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.இராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் றஆகியோரின் இல்லங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னையில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கின்றனர்.
தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குட்கா நிறுவனம் ஒன்றில் சென்னையில் கடந்த 2016 ஜூலை 8 ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பின்னர் வருமான வரித்துறை சார்பில் 2016 ஆகஸ்டு 11 இல் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கும், காவல்துறை தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் குட்கா நிறுவனத்தில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ், வருமான வரித்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததை வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது.
வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை காவல் ஆணையர் டி.கே.இராஜேந்திரன் காவல்துறை தலைவராகவும், பதவி உயர்வு பெற்ற அவலம் நடந்தது. ஊழல் கறைபடிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதன் பின்னர் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களும் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததும், வருமான வரித்துறை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்லில் அப்போது அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளருக்கு ரூ. 89 கோடி தொகை செலவு செய்யப்பட்டு, இருந்ததாகவும், அது எந்தெந்த வகையில் யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. இதிலும் முதன்மையான குற்றச்சாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் எழுந்தது என்பதை மறுக்க முடியாது.
இதன் பின்னர்தான் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னணியில்தான் சிபிஐ தற்போது சோதனை நடத்தி இருக்கிறது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றி தமிழக முதல்வர் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சந்தேகத்தின் நிழல் படிந்த ஒருவரை அமைச்சர் பொறுப்பில் நீடிக்க விட்டது ஏன் என்பதற்கு முதல்வர் பதில்கூற கடமைப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் சிபிஐ சோதனையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட முதல்வர் எடப்பாடிபழனிசாமி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறைக்கு தீராத களங்கம் ஏற்படுத்தும் வகையில் லஞ்ச ஊழல் புகாருக்கு உள்ளான காவல்துறை தலைவர் டி.கே.இராஜேந்திரன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.