திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த நிகிலா நாகேந்திரன் திடீரென கடலூர் மத்திய சிறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன என்று அறிய சிறைத்துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.
புழல் சிறையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் சிலரது உதவியுடன் அங்குள்ள கைதிகள் சிலர் நட்சத்திர ஓட்டலில் உள்ளது போல சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்தது குறித்தப் படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் சிறைக்குள்ளாக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது, அங்குக் கைதிகளின் பயன்பாட்டில் இருந்து வந்த எல்இடி டிவிக்கள், செல்போன்கள், கட்டில், மெத்தை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கியமான கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை சிறைகளிலும் அதிகாரிகள் அதிரடியாகச் சோதனைகளை மேற்கொண்டனர். இதன் ஒரு கட்டமாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 20ம் தேதி சோதனை நடந்தது. மாநகரக் காவல்துறை உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களிடம் பீடி, சிகரெட், கஞ்சா, மதுபானங்கள் மற்றும் சென்னை புழலில் கைப்பற்றப்பட்டதைப் போன்ற சொகுசு வாழ்க்கைக்குரிய பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தப்பட்டது. கழிப்பறைகள், மருத்துவமனை, நூலகம் போன்ற பல இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும் அது போன்ற பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த நிகிலா நாகேந்திரன் கடலூர் மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையில் கூடுதல் கண்காணிப்பாளரான முருகேசனுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருச்சி சிறைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுலதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல புழல், கோவை, சேலம் உட்பட பல்வேறு மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது சிறைத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.