தமிழகமெங்கும் பரவலாக பருவமழை சூடு பிடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக வானம் மூடியே திருச்சியில் காணப்பட்டது. நேற்று காலை முதல் சாரலாக துவங்கிய மழை நள்ளிரவு கனமழையாக உருவெடுத்தது. இதனால் மாநகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் முத்தரசநல்லூர் அருகே பழங்கால மரம் ஒன்று மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சாலையில் முறிந்து விழுந்தது. காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள் அதிகமாக சாலை மார்க்கத்தில் பயணித்து வந்தனர்.
அப்போது அரசு பேருந்து ஒன்று அந்தபகுதியை கடக்கும்போது அதன் மீது மரம் முறிந்து விழுந்ததால் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மழை பெய்துக்கொண்டிருந்ததால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்ததையடுத்து பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மரத்தின் பாகங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி எடுக்க சாலையில் போக்குவரத்து பயணம் மீண்டும் துவங்கியது.