கலைஞரின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் சேர முயற்சி செய்துவரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கித் தனது ஆதரவாளர்களுடன் பேரணி சென்றார். அதன்பின், கடந்த 23ந் தேதி அழகிரி தனது பலத்தை நிரூபிப்பதற்காக திருவாரூரும் சென்றிருந்தார்.
இதற்காக திருவாரூரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞர் புகழஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வந்த மு.க.அழகிரி, திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்துக்கு சென்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவருடைய மகன் துரைதயாநிதி உடன் இருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அழகிரி, திருவாரூர் செல்லும் வழியில் பெண்கள் கூட்டத்தைக் கண்டு காரை நிறுத்தி, அவர்களிடம் நலம் விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து திருவாரூர் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை, நேதாஜி சாலையில் உள்ள அண்ணா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, திருவாரூர் தெற்குவீதியில் உள்ள திருமண மண்டபத்தில் கலைஞரின் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொண்டு, கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசினார்.
அப்போது அவர், "வருகிற தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் கேட்பேனோ இல்லையோ, எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்பேன்” என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசியதாவது:
"மேடையில் பேசி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் எனது பிறந்த ஊருக்கு வந்துள்ளதால் பேசாமல் செல்ல முடியாது என்பதால் பேசுகிறேன். 1951-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி இதே ஊரில் தெற்குவீதியில் பிறந்தேன்.
எனக்கு அழகிரி என பெயர் வைத்தது பெரியார். அதேபோல், எனக்குத் திருமணத்தை நடத்தி வைத்ததும் பெரியார் தான். எனது தந்தை மேடையில் பேசும்போது எனது மகனுக்குச் சாதி மறுப்பு திருமணம் செய்து வைப்பேன் என்றார். சொன்னதை செய்யக் கூடியவர் தலைவர் கருணாநிதி. அவருடைய வழியில் நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டேன்.
தலைவர்(கலைஞர்) இல்லாமல் நான் மட்டும் தனியாக திருவாரூர் வருவது வேதனையாக உள்ளது. திருவாரூருக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தலைவருடன் சேர்ந்து வந்தது தான் நான் இங்கு கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதன்பிறகு 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
மற்ற அனைவரையும் விட கலைஞருக்கு என்னை நன்றாகத் தெரியும். என்னைப் பற்றி கலைஞர் ஒரு புத்தகத்தில், ‘நான் கண்ட சோதனைகள், போராட்டங்கள், நீயும் அனுபவித்திருக்கிறாய். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தது நீதான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. அவர் கைப்பட எழுதியதை நான் வைத்திருக்கிறேன். கலைஞர் பார்க்காத துரோகங்கள் இல்லை, அடக்குமுறைகள் இல்லை, பார்க்காத ஜெயில் இல்லை. அப்படியெல்லாம் நடத்திய கட்சியை, தற்போது இப்படி கொண்டுவந்து விட்டுவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.
திருவாரூரில் இடைத் தேர்தல் வரப் போகிறது. தலைவர் இல்லை, நீங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று பலர் என்னிடம் வற்புறுத்தினார்கள். தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் அவர்களிடம் கூறிவிட்டேன். தேர்தலில் நான் போட்டியிட்டால், மக்களிடம் வாக்குகள் கேட்பேனோ இல்லையோ, எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன்” என்று தெரிவித்த அழகிரி, "உடனே தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். தேர்தல் வரட்டும், பார்ப்போம். வரும் வழியில் என்னை வரவேற்க நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது, தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்த தொகையைக் கூட செலவு செய்யாமல் எளிமையாக வெற்றி பெறலாம் என்று தெரிகிறது" எனவும் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் அலைமோதியது. திருச்சி பொறியாளர் வெங்கடாஜலம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் முழு பலத்துடன் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. சென்னைப் பேரணியும் திருச்சி, மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களால்தான் சிறப்புப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.