தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அரளி விதையை சாப்பிட்டு மயங்கிய பள்ளி மாணவிகள் மூன்று பேர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த குனிகாந்தூர் மலை கிராமத்தில் மலைவாழ்மக்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்குத் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் ராமக்கா மேனிலை மாணவிகளுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.
12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு நேற்று இவர் நடத்திய சிறப்பு வகுப்பின்போது மாணவிகளிடம் பாடத்தில் இருந்து சில கேள்விகளை கொடுத்து அதற்கான விடைகளை எழுத கூறி உள்ளார். சிந்து, ராஜகுமாரி, காவ்யா ஆகிய மூன்று மாணவிகள் ஆசிரியை கொடுத்த கேள்விகளுக்கு விடை எழுதவில்லை; ஆசிரியைக்கு சொல்லாமலும் வீட்டிற்கு சென்று விட்டனர்.
மறுநாளான இன்று பள்ளிக்கு வந்த அந்த மூன்று மாணவிகளையும் அழைத்துக கண்டித்த ஆசிரியை ராமக்கா, அவர்கள் மூவரையும் தலைமை ஆசிரியைச சந்திக்கும்படியும், அவரிடம் அனுமதியினைப் பெற்ற பிறகே வகுப்புக்கு அவர்களை வரும்படியும் கூறி இருக்கிறார். தலைமையாசிரியரைச் சந்தித்தால் கட்டாயம் தங்களது ஒழுங்கீனம் பெற்றவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிடும் என பயந்த மூன்று மாணவிகளும் பள்ளிக்கு வெளியே வந்து அரளி விதைகளைச் சாப்பிட்டு மயங்கிச் சாய்ந்துள்ளனர்.
மயங்கிய நிலையில் இருந்த மாணவிகளை பொதுமக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பிறகு மாணவிகள் மூவரும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஜமுனமரத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய ஆசிரியர் தினம் இன்று. தங்களது ஒழுங்கீனமான நடவடிக்கைகளைத் திருத்த முற்பட்ட ஆசிரியருக்கும் தலைமை ஆசிரியருக்கும் சிறுமை சேர்க்க முற்பட்ட இந்த மாணவிகளின் செயல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!