தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் யார் ? ஈபிஎஸ்-ஓபிஸை முந்தும் மு.க.ஸ்டாலின்

Thursday 26, July 2018, 18:49:46

தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் மரணம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை போன்றவற்றால் அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக பொது மக்களும், அரசியல்வாதிகளும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் அதை தான் நிரப்பப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்து தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு நடத்தியது.

அதில் தமிழகத்தில் அடுத்து முதலமைச்சராக யார் வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்து ஆதரவு பெற்றவர்களை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோருக்கு 25 சதவீத மக்களும், டிடிவி தினகரன், ரஜினி ஆகியோருக்கு தலா 6 சதவீத மக்களும், கமல்ஹாசனுக்கு 5 சதவீத மக்களும், அன்புமணிக்கு 4 சதவீத மக்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை இந்த ரிசல்ட் பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz