மாணவியிடம் பாலியல் தொல்லை: ஆசிரியருக்குப் பாடம் கற்பித்த பொதுமக்கள்!

Saturday 08, September 2018, 00:46:44

தெய்வத்துக்கும் முதன்மையானவராக போற்றப்படும் ஆசிரியர்களிலும் கூட  சில மதிகெட்ட, ஒழுங்கீனமானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். சேலத்தில் மாணவியிடம் பாலியல் தொல்லைகள் தந்து வந்ததாகக் குற்றம் சாட்டி, ஆசிரியர் ஒருவருக்கு செருப்படி தந்து பொதுமக்கள் அவரைப் போலீசிலும் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மெய்யனூர் பகுதியில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற பெயரில் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். அண்மையில் இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியில் சேர்ந்த சதீஷ் குமார்,  மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி, ஒரு சிலரிடம் கெட்டவிதமான தீண்டல்களிடமும் ஈடுபட்டு வந்ததாகப் புகார் கிளம்பியது.

ஆசிரியர் சதீஷின் சீண்டல் எந்த  வகையிலானது என்பதைப் புரிந்து கொண்ட மூன்றாம் வகுப்புப் படிக்கும் சிறுமி ஒருவர், “இந்த மாதிரி எல்லாம் Bad Touch செய்தீங்கன்னா எங்க வீட்டிலேயே சொல்லிடுவேன் என்று எச்சரித்தும் இருக்கிறார். அதன்படி வீட்டில் அந்தச் சிறுமி சொல்ல விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது அப்போதுதான்.

ஆசிரியரின் இந்த அத்துமீறல்கள் குறித்தத் தகவல் கிடைத்ததும் பெற்றோர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டத்தில் இறங்கியது. ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பிரவீனைச் சந்தித்து நாம் இது குறித்துக் கேட்டோம். “பள்ளிகூடத்தில் இது பற்றி நாங்கள் நேரில் சொன்று புகார் கூறியபோது சம்பந்தப்பட்ட ஆசிரியரை முதல்நாளே வேலையில் இருந்து நீக்கி விட்டதாகப் பள்ளி நிவாகம் கூறியது.

அதனை ஏற்காமல் நாங்கள் சதீஷ் வந்து சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினாலொழிய அங்கிருந்து போக மாட்டோம் என்று கூறி தரையில் அமர்ந்தோம். அதே சமயம் தனது சான்றிதழ்கள் சிலவற்றினைக் கேட்டு எதேச்சையாக சதீஷே அங்கு வர பொறியில் சிக்கிய எலியாக எங்களிடம் மாட்டினார். அதன் பிறகு உணர்வு வயப்பட்ட பெற்றோர்கள் அவரை வெளியே இழுத்து வந்து பாடம் புகட்டியது எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்.

போக்ஸோ சட்டம் பற்றிய புரிதல் இல்லாத பெண் போலீசார்!

இந்தப் புகார் குறித்து விசாரணையை ஏற்ற சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினருக்கு போஸ்கோ சட்டம் பற்றிய சரியான புரிந்துணர்வே இல்லை என்பதுதான் வேதனை. ஆசிரியரைப் பற்றிய புகாரினைக் கூறிய சிறுமியை முதலில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வரும்படிக் கூறினார்கள். போஸ்கோ சட்டத்தின்படி அது தவறு என்பதையும் சிறுமி இருக்கும் இடத்துக்கு விசாரணை அதிகாரிதான் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்பதையும் ஆய்வாளரிடம் நாங்கள் எடுத்துக் கூற அது ஏற்கப்பட்டது.

பின்னர் ஆய்வாளர் வளர்மதி காவல் சீருடையுடன் சிறுமியினை விசாரிக்கக் கிளம்பியபோது, போக்ஸோ சட்டத்தின்படி அதனையும் தவறு என்பதை மீண்டும் நாங்கள் சுட்டிக் காட்ட மப்டிக்குத தன்னை மாற்றிக் கொண்டு ஆய்வாளர் கிளம்பினார். ஆனால், சிறுமியின் வீட்டுக்கு அவர் வந்தபோது சீருடையுடன் இரண்டு மகளிர் காவலர்களையும் அழைத்து வந்திருந்தது எங்களை அதிர வைத்தது.

இது அப்பட்டமான விதிமுறை மீறல். போலீஸ் என்ற மிரட்டல்தொனியினை குழந்தைகளிடம் இதுபோன்ற விசாரணையின்போது தவிர்த்து சாதரணமானவர்களாக இயல்பாக அவர்களுடன் நடந்து கொண்டு அன்பாகவும் ஆதரவாகவும் பேச வேண்டும் என்ற  போக்ஸோ சட்ட அடிப்படையே இதன் மூலம் மீறப்பட்டது” என்று மகளிர் காவலரின் சட்ட அறிவு குறித்த தனது வேதனையினை நம்மிடம் பதிவு செய்தார் பிரவீன்.

ஆசிரியர் என்ற போர்வையின் கீழ் சதீஷ் செய்து வந்த அயோக்கியத்தனங்கள் உண்மையே என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போக்ஸோ சட்டம் மற்றும் கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ்க் கைது செய்யப்பட்ட சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz