மன உளைச்சலினால் மாரடைப்பு: மரணமடைந்த சேலம் எஸ்.ஐ.

Saturday 01, September 2018, 21:50:38

சேலம் போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரராகப் பணியாற்றி வந்த அமானுல்லா என்பவர் இன்று அதிகாலையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதம் ஒரு முறை சேலம் வருகை புரிந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் சேலத்தில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்படி அவர் வரும் சமயங்களில் எல்லாம் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதன்படி கடந்த 29 ஆம் தேதி சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  கோவில் கும்பாபிஷேகம், பெட்ரோல் பங்க் திறப்பு, திருமண நிகழ்ச்சி என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் அவர் செல்லும் இடங்களில் பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்து ஒழுங்கு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழக முதல்வர் சேலம் நிகழ்ச்சிக்காக கடந்த 2 நாட்களாக இடைவிடாமல்  பணியில்  எஸ்.ஐ. அமானுல்லா ஈடுபடுத்தப்பட்டார்; தொடர்பனியின் காரணமாக  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இது தொடர்பான மன உளைச்சலின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டது; மரணமடைந்தார் என அவரது உறவினர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.  

மாரடைப்பால் மரணமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அமானுல்லாவிற்கு இன்று தமிழக முதல்வரின் சேலம் நிகழ்ச்சிக்காக  அயோத்தியாபட்டினம் செக்போஸ்டில் பணி மேற்கொள்ள சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் உத்தரவு வெளியாகி இருந்தது.

அதனை வேதனையுடன் நம்மிடம் காட்டி, “இன்று அமானுல்லா; நாளை எங்களில் யாரோ தெரியவில்லை சார். நாங்களும் மனிதர்கள்தாமே. இதைக் கருத்தில் கொண்டு இரக்கமற்ற முறையில் ஓய்வில்லாமல் எங்களிடம் தொடர்ந்து வேலைவாங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்” என்று கண்களில் நீர்துளிக்க நம்மிடம் பகிந்துகொண்டார் முதனிலைக் காவலர் ஒருவர்.  

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz