புதுடெல்லி,
நாடு முழுவதும் பசுக்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி, வன்முறையில் ஈடுபடுவதும், அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும், அடித்துக் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பசுக்காவலர்கள் என்ற பெயரில், பசுவை கடத்துகிறார்கள், பசுவை இறைச்சிக்காக அடித்துக்கொல்கிறார்கள் என்று கூறி அப்பாவி மக்களை அடித்துக்கொல்லும் சம்பவங்கள், வட மாநிலங்களில் அதிகளவில் நடந்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் நகரில் பசுக்களை கடத்துவதாக கூறி மாடு வியாபாரி ஒருவரை கும்பல் அடித்தே கொன்றது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
இந்தநிலையில் இது குறித்து மாநிலங்களவையில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தேச விரோத செயலுக்கு பயன்டுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். வந்தந்திகள் பரவுவதை வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
பேஸ்புக் , வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சமீபத்தில் 95 வீடியோக்கள் யுடியூப்பிலும், 457 தவறான தகவல்கள் பேஸ்புக்கிலும் நீக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை பரப்புவர்களை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது முக்கியம், இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.