வாஷிங்டன்,
எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு, பலமுறை வடகொரியாவை பாராட்டி பேசிய டிரம்ப், அணு ஆயுதங்களை ஒழிப்பதில் வடகொரியா தீவிரமாக செயல்படுவதாக பாராட்டி பேசியிருந்தார். இந்த நிலையில், வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா திடீரென குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறும்போது, 'வடகொரியா இன்னும் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என்றார்.