தர்மபுரி மாவட்ட தி.மு.க.வின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து அம் மாவட்டத்தின் செயலாளராக தொண்டர்களின் ஆதரவுடன் வலம் வந்தவர் முன்னாள் அமைச்சரான முல்லைவேந்தன். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தர்மபுரி தொகுதியில் தோற்றுப் போனது. இந்தத் தோல்விக்கு அத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களே காரணம் என்று கட்சித் தலைமை குற்றம் சாட்டியது. ஆனால் இதனை ஏற்க மறுத்தார் முல்லைவேந்தன். கட்சித் தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தலைமை அவரைக் கட்சியில் இருந்து நீக்கியது.
அதன்பிறகு அவரைத் தங்கள் கட்சிக்கு வருமாறு தே.மு.தி.க. விடுத்த அழைப்பினைத் தனது ஆதரவாளர்கள் வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொண்ட முல்லைவேந்தன் அக்கட்சியில் இணைந்தார். ஒரு சில மாதங்கள் மட்டுமே அங்கிருந்த அவருக்கு அக்கட்சியின் செயல்பாடு பிடிக்காமல் போகவே ஒதுங்கி அமைதியானார்.
அண்மையில் ஸ்டாலின் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முல்லைவேந்தனுக்கு மீண்டும் தி.மு.க.வில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட முல்லைவேந்தன் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து தர்மபுரி மாவட்டத் தி.மு.க. புதுத் தெம்புடன் புத்துயுர் பெற்றது. தொண்டர்கள் பட்டாசுகள் கொளுத்தி முல்லைவேந்தனின் வரவை மகிழ்ச்சிப் பெருக்குடன் வரவேற்றனர். திமுகவில் இணைந்த தர்மபுரி திரும்பிய முல்லைவேந்தன் இன்று காலை தர்மபுரி நான்குரோடு பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு தனது ஆதரவாளர்களோடு சென்று மாலையிட்டு தர்மபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.
கட்சி அலுவலகத்தில் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் முல்லைவேந்தனை வரவேற்றனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த முல்லைவேந்தன் "கலைஞர் இருந்த பொழுது எப்படி அவருடன் இணைந்து பணியாற்றினீர்களோ, அதேபோல என்னுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
முந்தய காலங்களில் திமுகவில் எப்படி பணியாற்றினேனோ அதேபோல பணியாற்றி தர்மபுரி மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவேன். இனி என் இறுதி மூச்சு உள்ளவரை திமுகவில் கடைசிவரை பணியாற்றுவேன்" என தெரிவித்தார்.