திருச்சியின் முக்கிய சுற்றுலா மையமான முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 9 மதகுகள் தகர்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்ட வெள்ளநீர் கடலில் கலந்து ஒரு வருடம் பாசனத்திற்கு பயன்படுத்தக் கூடியளவிலான நீர் வீணானது.
முதல்வரும் அணையை பார்வையிட்டு 4 நாட்களுக்குள் வெளியேறும் நீர் கட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்துச் சென்றார். இதனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகச் சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப் பட்டன. ஒரு மாதமாகியும் வெளியேறும் நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பொதுப்பணித் துறையினர் திணறினர்.
இந்த நிலையில் ஆற்றுக்குள் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு வந்து கொட்டும் பணியும் நடந்தது. இருப்பினும் பாறாங்கற்களின் இடைவெளி வழியாகத் தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டுதான் இருந்தது.
இந்த நிலையில், காவிரிநீர்ப் பிடிப்புப் பகுதிகளில் சில நாட்கள் பெய்த மிதமான மழையால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகமானது. இதனால், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மணல் மூட்டைகள் சரிந்து விழுந்ததை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
இது சம்பந்தமாக அந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், "தண்ணீர் அதிகமாக வந்ததால் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் வேகமாக வெளியேறியது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்த இடம் சுமார் 35 அடிக்கும்மேல் ஆழமான பகுதியாகும்.
அந்த இடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. காவிரியில் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்த தண்ணீரை புள்ளம்பாடி, அய்யன், பெருவளை வாய்க்கால்களில் திறந்து விடுவதற்காக தேக்கியதால் தான் கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகரித்தது. இதனால்தான் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன’ என்றார்.
"இந்த நிலையில் திருச்சியில் உள்ள சமூக ஆர்வலர்கள், இந்தத் தற்காலிக அணை அடைப்பு விஷயத்திலே ஏகப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் வருகின்றன. சாக்கு வாங்கியதில், ஊழல், மணல் அடுக்கியதில் ஊழல், வேலை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுப்பதில் ஊழல் என்று ஏகப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
தற்காலிக அடைப்பு பணிக்கு 90 இலட்சம் பத்தவில்லை இன்னும் 4.5 கோடி பணம் வேண்டும் என்று அதிகாரிகள் திட்டம் போட்டு அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் மழைக்காலம் நமக்கு ஆரம்பிக்கவில்லை, அப்படி ஆரம்பித்தால் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்ட இந்த மறுசீரமைப்பு பணிகள் அனைத்தும் சேதமாக வாய்ப்பிருக்கின்றது.
காவிரியில் வெள்ளம் ஆர்ப்பரித்ததால் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள், கொட்டப்பட்ட பாறாங்கற்கள் அத்தனையும் அடித்துச் செல்லப்படலாம். இதனால், ராணுவம் கொண்டு சீரமைப்புச் செய்தால் ஊழலுக்கும் வாய்ப்பில்லை, அணை பராமரிப்பால் பொதுமக்களுக்கும் பாதிப்பில்லை" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.