ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் உறவு முறை என்பது மரபணுவின் தாக்கம் என்கிறது ஆய்வுகள்.
LGBT உறவுமுறை என்பது குற்றமல்ல என்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் "அரசியலமைப்பு அமர்வு" வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை செப்டம்பர் 6 ம் தேதி வியாழன் அன்று அளித்தது.
158 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 377. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு விடுதலை அளித்துச் சென்று 70 ஆண்டுகள் ஆகியும்கூட நேற்றுவரை இச் சட்டப்பிரிவு அமலில்தான் இருந்தது.
இச் சட்டப்பிரிவின் படி "இயற்கைக்கு மாறாக அதாவது ஆண் பெண் அல்லாமல் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் அன்புகொள்வதும், உறவு கொள்வதும், மிருகங்களோடு உறவு கொள்வதும் கிரிமினல் குற்றம். இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும், தேவைப்பட்டால் ஆயுள் தண்டனை கூட வழங்கலாம்" என்பதே.
இதில், மிருகங்களோடு உறவு கொள்ளவது மட்டுமே குற்றம் மற்றபடி ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், மாற்றுப் பாலினத்தவருடன் உறவு என்பது குற்றமல்ல அது அவ்வாறான ஈடுபாடும், ஆர்வமும் கொண்டவர்களின் உரிமை என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் சாராம்சம்.
சரி...யார் இவர்கள். இவர்கள் ஏன் இப்படிப்பட்ட உறவுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?
இப்படிப்பட்ட Sexual orientation அதாவது உடல்சார் உறவு முறைகளை மட்டுமே விரும்பும், ஈடுபடுபவர்களை LGBTQ என வகைப்படுத்துகிறார்கள்.
L - Lesbian (லெஸ்பியன்)
ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புவது, காதலிப்பது, அவரோடு வாழ விரும்புவது, உறவில் ஈடுபடுவது. இப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்கள் மீது ஈடுபாடு இருக்காது.
G - Gay (கேய்)
ஒரு ஆண் இன்னொரு ஆணை விரும்புவது, காதலிப்பது, அவரோடு வாழ விரும்புவது, உறவில் ஈடுபடுவது. இப்படிப்பட்ட ஆண்களுக்கு பெண்கள் மீது ஈடுபாடு இருக்காது.
B - Bi sexual (பை செக்ஸுவல்)
ஒரு ஆண் பெண்ணையும் விருப்புவார் ஆணையும் விரும்புவர். இருவரோடும் உறவு கொளவதில் ஈடுபாடு கொண்டவர். அதே போல ஒரு பெண் ஆணையும் விரும்புவார் பெண்ணையும் விரும்புவார்.
T - Transgender (மூன்றாம் பாலினத்தவர்)
உடல்ரீதியாக ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் அதற்கேற்ற உடல் உறுப்புகள் இல்லாமல் ஆண், பெண் தாண்டி மூன்றாம் பாலினத்தவராக பிறவியியிலேயே உள்ளவர்கள். இவர்களின் உடல் சார் விருப்பங்கள்.
இதுதவிர...தனது sexual orientation இந்தப்பட்டியலில் எது எனத் தீர்மானிக்க முடியாமல் கேள்விக்குறியாக உள்ளவர்கள் இவர்களை "questioning அல்லது queer" என வகைப்படுத்துகிறார்கள். இதையே "Q " என்ற எழுத்து இங்கே.குறிப்பிடுகிறது.
ஆனால் பொதுவாக இவை அனைத்தையுமே "ஹோமோ செக்ஸ்" என்று நடைமுறையில் குறிப்பிடுகிறோம். இதன் பொருள் தன் சொந்த பாலினத்தாலேயே ஈர்க்கப்படுவது.
சரி... ஆண் பெண்ணால் ஈர்க்கப்படுவதும், பெண் ஆனால் ஈர்க்கப்படுவதற்கும் என்ன சொல் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இதற்குப்பெயர் "Hetrosexual" ஹெட்ரோ செக்சுவல். இதையே இயற்கைக்கு ஏற்ற உறவு என்கிறோம்.
அதே தருணம்....LGBTQ ஆகியோர் தங்களின் sexual orientation இதுதான் என்று உணரும்போதும், அதைத்தவிர தங்களுக்குக் காதல் செய்ய, அன்பு செலுத்த வேறு வழியே இல்லை என உடல், மன ரீதியாக உணரும்போதுதான் அவர்கள் முழுமையான LGBTQ ஆகிறார்கள்.
ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை அதன் sexual orientation என்பது அவர்களாகத் தேர்ந்தெடுப்பது அல்ல அவர்களுக்கு Biological origin அதாவது அவர்களது மரபணுவிலேயே அதன் காரணம் அடங்கி இருக்கிறது என்று சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
அந்த வகையில் உடல், மன ரீதியாக இத்தகைய உணர்வுகள், வாழ்வியல் முறைகளைக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் LGBT க்கள். பிரிட்டனில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 10 லட்சம் பேர் LGBT க்கள். இந்தியாவில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 2012 ம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் 25 லட்சம் LGBT க்கள் உள்ளதாகக் கூறியுள்ளது.
ஆனால், உண்மையில் இவர்களின் எண்ணிக்கை உலக அளவில் கோடிகளைத் தாண்டக்கூடும். காரணம், இந்தியா உள்பட மதவாதிகள் கட்டுப்படுத்தும் நாடுகளில் sex கல்வி பற்றிப் பேசவே முடியாத சூழல் நிலவும் நாடுகளில் தனது sexual orientation பற்றியெல்லாம் இப்படிப்பட்ட orientation உள்ளவர்களால் வெளிப்படையாகக் கூற முடியாது.
அவ்வாறு கூறினால், அவர் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவார், தாக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்படுவார். அவ்வளவு ஏன்? பெற்றோர்களே அக் குழந்தைகளைப் புறக்கணிக்கக் கூடும்.
எனவேதான், இவர்களின் நிலை அறிந்து அவர்கள் ஒரு சமூகமாக வாழ உரிமை அளிப்பதே 377 சட்டம் அகற்றப்பட்டதன், குற்றமற்றதாக ஆக்கப்பட்டதின் பின்னணி.
ஒன்பது, அலி...என்றெல்லாம் கொச்சையான சொற்களால் காயப்படுத்தப்பட்டு வந்த மூன்றாம் பாலினத்தவர்களையே இப்போதுதான் கல்வி கற்ற சமூகத்தினர் ஓரளவுக்கு மதிக்கிறார்கள், காவல்துறை உள்ளிட்ட சில பொறுப்புகளில் அமர முடிகிறது.
இவர்களில் பலருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கப்படுவது இல்லை, வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுவது இல்லை, கல்வியிடத்திலும் சமமாக நடத்தப்படுவதில்லை ...எனவே, பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுதல் அல்லது பிச்சை பெற்று வாழ்தல் என்று நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய நிலையில் இவர்கள் உள்பட LGB யினருக்கும் ஆறுதலான ஒன்று "தங்கள் உறவு முறைகள்" குற்றமல்ல என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு.
ஆனால், இவர்களை சக மனித இனமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மன நிலை உருவாக, இவர்களுக்கான திருமண உரிமை, மணமுறிவு உரிமை, குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது உள்பட பிற பொது மனிதர்க்கு உள்ள உரிமைகளைப் பெற இன்னும் பல ஆண்டுகாலம் ஆகலாம்.
- விஷ்வா விஸ்வநாத்