ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தி.மு.க. நிர்வாக வசதிக்காக கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இதற்கு அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தன்னுடைய அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கொதித்த அவர் இதன் காரணமாகக் கட்சியை விட்டே வெளியேறினார்.
அதன்பிறகு அ.தி.மு.க.வில் இவர் இணைய முடிவெடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவு\க்குத் தகவல் தெரிவிக்க, 26.07.2016ல் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். பிறகு 2017 டிடிவி தினகரன் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கட்சியில் இருந்து விலகினார்.
இதன் பிறகு ஓராண்டுக்கும் மேலாக வேறு எந்தக் கட்சிக்கும் செல்லாமல் அமைதி காத்துக் காத்திருந்தவருக்கு தி.மு.க.வில் இருந்து மீண்டும் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது.. தற்போது தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.
கருப்பசாமி பாண்டியனைப் போன்றே அதிக வல்லமை படைத்த மாவட்டச் செயலாளராக தி.மு.க.வில் வலம் வந்தவர் முல்லைவேந்தன். முன்னாள் அமைச்சரான இவர் தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளராகப் பல ஆண்டுகள் பதவி வகித்து தொண்டர்களின் செல்வாக்கினைப் பெற்றிருந்தவர்.
2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தி.மு.க. தோற்றது. தேர்தல் தோல்விக்குத் தி.மு.க. பொறுப்பாளர்கள் சரிவர வேலை செய்யாததே காரணம் என்று கருதிய தலைமை அவர்களிடமிருந்து மெத்தனமாக தேர்தல் பணி செய்யாமல் விட்டதற்கு விளக்கம் கோரியது.
தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான முல்லைவேந்தன் வேட்பாளர் தேர்வு சரியில்லாததே தோல்விக்குக் காரணம் என்று கூறி தோல்விக்குப் பொறுப்பேற்கவோ அதற்காக மன்னிப்புக் கோரவோ மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட தி.மு.க. தலைமை அவரைக் கட்சியில் இருந்தே விலக்குவதாக அறிவித்தது.
அதன் பின்னர் 2015ல் தே.மு.தி.க.வில் இணைந்த முல்லைவேந்தனுக்கு அந்தக் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே கட்சியில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டு அரசியல் துறவறம் பூண்டவரானார்.
இதனை ஏற்க மறுத்த அவரது ஆதரவாளர்கள் அவரை மீண்டும் தாய்க் கழகத்தில் இணையும்படி வற்புறுத்தி வந்தனர். தனது ஆதரவாளர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக மனம் மாறிய முல்லைவேந்தன் தி.மு.க.வில் இணைய இசைவு தெரிவித்தார்.
இதனையடுத்து ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். தர்மபுரியில் தடுமாறி வந்த தி.மு.க.வுக்கு மீண்டும் பலமாக வந்து முல்லைவேந்தன் வருகை உள்ளதாகக் கூறி இதனைத தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.