புதுடெல்லி,
தாஜ்மஹாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் உரிய அக்கறை இன்றி செயல்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் ‘‘தாஜ் மஹாலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையெனில் அதை இடித்துவிடுங்கள்’’ என்று மத்திய அரசுக்கு சில வாரங்களுக்கு முன் உச்சநீதின்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.
உத்தரப்பிரதேச அரசின் வரைவு அறிக்கையில் ஆக்ரா சுற்றுவட்டாரப்பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்றுதல், தொழிற்சாலைகளை அகற்ற நடவடிக்கை, போக்குவரத்து நெரிசலைக்குறைத்தல் உள்ளிட்ட உறுதிமொழிகள் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இது குறித்த விசாரனை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய அக்கறையின்றி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பல்வேறு அதிகாரிகள் இருப்பதால் அவர்கள் பொறுப்பை கைகழுவி விடுவதாகவும் எனவே தாஜ்மஹாலை பராமரிக்க ஒரு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.