மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பல்வேறு மாநகரங்களும் முதல் இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் குப்பை இல்லா மாநகரத்தை உருவாக்க பல்வேறு நிகழ்ச்சிகளைப் பொதுமக்களிடத்தில் நடத்தி வருகின்றன.
தமிழக அளவில் தூய்மை இந்தியா திட்டப் பணிகளில் திருச்சி முதலிடம் பிடித்திருந்தாலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளும், உணவகங்களின் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இப்படிக் கொட்டப்படும் உணவுக் கழிவுகளைத் தின்று பெருகி வரும் பன்றிகளாலும், தெரு நாய்களின் அட்டகாசத்தாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி ஜெயில் கார்னர்- பொன்மலைப்பட்டி பிரதான சாலையில் பல்வேறு உணவகங்களின் கழிவுகளை அதன் ஊழியர்கள் சாலையோரப் பகுதிகளில் கொட்டுவதால் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது என பொன்மலைப்பட்டி பகுதிவாசிகள் பல்வேறு புகார்களை மாநகராட்சிக்கு அனுப்பியுள்ளனர்.
திருச்சி சுப்ரமணியபுரம் பகுதி ஓட்டல்களில் இருந்து கழிவுகளை இந்தப் பகுதிகளில் கொட்டி பன்றிகளை பலர் வளர்த்து வருகின்றனர். இதனால், இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சிப் பகுதியில் பன்றிகள் வளர்க்கக் கூடாது என்று விதி இருந்தும் அது காற்றோடு போகி்றது.
திருச்சி மாநகராட்சியில் பீமநகர், தென்னூர், சஞ்சீவி நகர், அரியமங்கலம், பொன்மலை என பல பகுதிகளில் ஹோட்டல் கழிவுகள், பழக்கடைகளில் உள்ள அழுகிப்போன பழங்கள் கொட்டப்படுவதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இந்தப்பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.
தூய்மை நகர பட்டியலில் முதலிடம் பெற மாநகராட்சி பல முயற்சிகளை எடுத்தாலும் இது போன்ற சீர்கேடுகளை தடுக்காவிட்டால் மாநகராட்சியின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகி விடும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.