நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான் இன்றைய நாளை நாடே வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று கிராம சபை கூட்டங்களும் நடந்துக்கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் தஞ்சை மாவட்டத்தை அடுத்த திருவிடைமருதூர் ஒன்றியம் எஸ்.புதூர் கிராமத்தில் காந்திய நெறிகளுக்கேற்றாற்போல் கடந்த 15-08-2018-ல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கிராமம் முழுவதிலும், பன்னாட்டு குளிர்பானங்களை கொள்முதல் செய்வதை தவிர்த்தும், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா ஊராட்சியாக மாற்றிடவும் உறுதிமொழி எடுத்து அதன்படி இன்று நகர வணிகர்சங்கம் சார்பாக அனைத்து கடைகளிலும் அந்நிய குளிர்பானம், பிளாஸ்டிக் இல்லா முன்னுதாரன ஊராட்சியாக்கிக்கொண்டிருக்கின்றனர் அப்பகுதி வணிகர்களும், இளைஞர்களும்.
இதுகுறித்து குடந்தை வணிகர் சங்கத்தை சேர்ந்த சக்தி என்பவர் நம்மிடம், "காந்திய வழியில் 100% நம்மால் பயணிக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் எல்லாம், பன்னாட்டு வணிகப் பொருட்களை தமிழகத்தில் புறக்கணித்து, ஆடை முதல், கல்வி வரை நம் கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டாலே நாம் காந்தி சொன்னதை முழுமையாக கடைபிடித்ததற்கு சமமாவோம்" என்றார்.
மேலும், "எங்கள் பகுதிகளில் ஆரம்பம் முதலே துணி பைகளையே பொருட்கள் வாங்கி வருவதற்கும், கடைகளுக்கு சென்றால் பிளாஸ்டிக் பை கொடுக்கும் கடைகாரர்களுக்கும் விழிப்புணர்வை கொடுத்து கையில் இருக்கும் துணி பைகளை கொடுத்து பிளாஸ்டிக் இல்லா நகரமாக்க முயற்சி செய்யுங்கள் எனக் கூறுவதை வழக்கமாக்கிக் கொண்டோம். அதன்படி எங்களை சார்ந்தவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் பிளாஸ்டிக் பைகளையும், அந்நிய பாபானங்களையும் தவிர்த்திட பல்வேறு வகையில் கோரிக்கையை முன்வைத்துக்கொண்டே இருக்கின்றோம்" என்றார்.