திருச்சி இரயில்வே நிலையம் அருகே உள்ள கதர் அங்காடி வளாகத்தில் அண்ணல் காந்தியடிகள் 150-வது பிறந்தநாள் முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனைத் தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார்.
கதர் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது;
"நாடுமுழுவதும் இன்று அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கிராமங்கள் வளர்ச்சியடைய அண்ணல் காந்தியடிகள் கண்ட கனவை நாம் அனைவரும் நனவாக்க பாடுபட வேண்டும். நாடு முழுவதும் ஆரோக்கியம், சுற்றுசூழல், தூய்மை இருக்க வேண்டும் என கனவு கண்டார். அந்த நோக்கத்தினை நிறைவேற்ற அக்டோபர் 02ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இக் கூட்டத்தில் குறிப்பாக தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாகவும், நெசவாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் நாம் அனைவரும் ஆரதவு அளிக்க வேண்டும். அப்போது தான் அண்ணல் காந்தியடிகள் கண்ட கனவு நனவாகும்.
தமிழக அரசு கதர் ஆடைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டும்.
கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கும், கிராமத் தொழில்களின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். ஆடைகளுக்கான துணி ரகங்களை நெசவு செய்யும் கிராமப்புற ஏழை, எளிய நெசவாளர்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். இதற்காகப் பல்வேறு சீரிய திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கிராமப்புறங்களிலுள்ள நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கேற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமப்புறங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், அனைத்து கதர் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்துத் தரப்பு மக்களும் அணிந்திட உகந்த கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவீத தள்ளுபடி வழங்கி வருகிறது. ஒவ்வொரு கிராமமும் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அண்ணல் காந்தியடிகள் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கதர் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் நூல் நூற்றல் மற்றும் நெசவு நெய்தல் மூலம் பயன் பெறுகின்றனர்.
மேலும் தேனீ வளர்த்தல், சோப்பு தயாரித்தல், கைமுறை காகிதம் தயாரித்தல், காலணிகள் தயாரித்தல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற கிராமத் தொழில்களால் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இயந்திரமயமான இவ்வுலகில் கைத்தொழில்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், பலருக்கு வேலைவாய்ப்பு பெருகிட உறுதுணையாகவும் இருந்து வருகிறது" என்று ஆட்சியர் தனது உரையில் குறிப்பிட்டார்.
திருச்சி உதவி இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் ஜங்சன் இரயில் நிலையம் அருகில் காதிகிராப்ட் ஒன்றும் மணப்பாறையில் ஒன்றும், கதர் அங்காடி வளாகம், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், அந்தநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்காக வையம்பட்டி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
திருச்சி மாவட்டத்தில் கதர் விற்பனையில் கடந்த ஆண்டு ரூ.75.44 இலட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூபாய் 48.78 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடு ரூ.70.92 இலட்சங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கதர், பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதமும், பட்டு 30 சதவீதமும், மற்றும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு கடன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. கதர் அங்காடிகளில் தரமான கதர், பாலியஸ்டர், அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு இரகங்கள், உல்லன் இரகங்கள், சுத்தமான இலவம் பஞ்சினாலான மெத்தை தலையணைகள் மற்றும் போர்வைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசு அலுவலர்கள் பொது நிறுவனங்கள் மற்றும் பொது மக்களும் காதிகிராப்ட்களிலும் ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்களிலும் தங்களுக்கு தேவையான துணி இரகங்களையும், மெத்தை தலையணைகளையும் பெருமளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுப்பணியாளர்களுக்கு பத்து மாத சுலப தவணைகளில் மேற்கண்ட இரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும், இந்த தள்ளுபடி காலத்தை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்களை வாங்கி பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தை நம்பியுள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்திட உதவிடும்படி மக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந் நிகழ்ச்சியில் காதி மண்டல துணை இயக்குநர் என்.மணிவாசகன், கதர் துறை உதவி இயக்குநர் கோ.பாலக்குமாரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.