காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகிம்சையை வலியுறுத்தும் விதமாக மதுரை அரசு அருங்காட்சியகம், காந்தி நினைவு அருங்காட்சியகம் இணைந்து அண்ணல் காந்தியடிகள் தபால் தலைக் கண்காட்சியினை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடத்தியது.
இந்தக் கண்காட்சியில் மதன், லால்குடி விஜயகுமார், மகாத்மா காந்தி 150 ஆண்டுகளை முன்னிட்டு 150 காந்தி தபால் தலை கண்காட்சி நடத்தி வரும் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மகாத்மா காந்தி தனிச் செயலாளராக இருந்த வெ.கல்யாணம் காந்தியடிகள் எழுதிய கடிதம், திருத்திய கடிதங்களையும் காட்சிப்படுத்தி பேசுகையில்,
"காந்தி ஆஸ்ரமத்தில் அதிகாலை எழுந்து பிரார்த்தனை நடைபெறும். காந்திக்கு வரும் கடிதங்களை வாசிக்கச் சொல்வார். அகற்கான பதில் கடிதம் எழுதும்போது திருத்தங்களைக் கூறுவார். பின்னர் திருத்துவார். யாரையும் கடிந்து பேச மாட்டார். திங்கட்கிழமை தோறும் மெளன விரதம் இருப்பார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 6 முறை காந்தியைக் கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால், சுதந்திரம் பெற்ற ஆறாவது மாதத்திலேயே நமது ஆட்சியில் காந்தியை இழந்தோம். ஆங்கிலேயர் காலத்தில் லஞ்சம், லாவண்யம் கிடையாது. மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வந்தால் வரவேற்பேன்" என்றார். மேலும், "நேதாஜி ஆட்சி முறை அமைந்திருந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தை கொண்டிருந்தார்" என்றார்.
இந் நிகழ்ச்சியின்போது வரலாற்று ஆய்வாளர் குமார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மதுரையில் உள்ள காந்தி சிலைக்குத் தியாகியும், காந்தி தனிச் செயலருமாகிய வெ.கல்யாணம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.