ஸ்ரீகாளஸ்தி,
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் மீது பூமியின் நிழல் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து, கருப்பாக காட்சியளிக்கும். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இன்று விண்ணில் தென்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இதனை காணலாம்.இந்தியாவில் இன்று இரவு 10.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவைத் தாண்டி நாளை அதிகாலை 3.50 வரை நீடிக்கும் இந்த பூரண சந்திர கிரகணத்தை, வெறும் கண்ணால் பார்க்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சந்திர கிரகணத்தையொட்டி, ஆந்திராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில், இன்று இரவு கிரகண கால சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
பொதுவாக, அனைத்து கோயில்களிலும் கிரகண காலங்களில் நடை சாத்தப்பட்டு கிரகண சாந்தி அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னரே சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பார்கள்.
ஆனால் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மட்டும் கிரகண காலங்களிலும் பூஜை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு பூஜையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் வருகையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.