சென்னையில் இன்று அரசுப் பேருந்தில் சில கல்லூரி மாணவர்கள் படியில் நின்றபடி பட்டாக் கத்திகளைத் தரையில் தேய்த்துத் தீப்பொறி பறக்கவிட்டு அட்டகாசம் செய்து பயணித்தனர். மாணவர்களின் இந்த அடாவடியால் பேருந்தில் பயணித்தவர்கள், சாலையில் சென்றவர்கள் என அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உறைந்து செய்வதறியாது தவித்தனர்.
இன்று காலையில் காரனோடையில் இருந்து பிராட்வே சென்ற 57F வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தில் கும்பலாக ஏறிய சென்னை மாநிலக் கல்லூரியினைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அத்துமீறி செய்த அட்டகாசங்களினால் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. முன்புறப் படியில் தொங்கியபடி சிலர் ஓங்காரக் கூச்சலிட்டபடி தங்கள் கையில் இருந்த பட்டாக் கத்தியினைத் தரையில் தேய்த்துத் தீப்பொறியினைப் பறக்க விட்டனர்.
முன்புறம் நின்ற மாணவர்கள் செய்த அட்டகாசங்கள் ஒருபுறமிருக்கப் பேருந்தின் பின்புறப் படிக்கட்டுகளில் கூச்சலிட்டபடி நின்றிருந்த மாணவர்களும் திடீரெனப் பட்டாக் கத்தியைத் தரையில் தேய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்டு பயந்த பொதுமக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். இதனைத் தட்டிக் கேட்க முற்பட்ட பேருந்தில் பயணித்த ஒரு சிலரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி வாட்சப்பில் வைரலாகப் பரவியது போலீஸ் கவனத்துக்கும் சென்றது. இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் பேருந்தில் தொங்கியபடி சாலையில் கத்தி தேய்த்து சென்ற சம்பவத்தில் தொடர்புடைய சம்பந்தபட்ட ஆனந்தராஜ் என்ற மாணவனைக் கைது செய்தனர். கைதான ஆனந்தராஜ், முதலாம் ஆண்டு, மாநில கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த ஆண்டு முன்பு நடந்த இதே போன்ற நிகழ்வுக்கு தக்க நடவடிக்கையினைப் போலீசார் எடுத்ததையடுத்து இது போன்ற சம்பவங்கள் சிறிது காலம் நடக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கும் இந்த அட்டகாசங்களைப் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துக் களைய வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த விருப்பம்!