முற்போக்குப் பெண் வழக்குரைஞர்கள் கொண்டாடிய பெரியார் பிறந்த நாள் விழா!

Monday 24, September 2018, 23:58:10

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஓட்டல் அருண், சுமங்கலி மகால், நரேந்திர தபோல்கர் அரங்கில் பெண் வழக்குரைஞர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினரால் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்கம், நாடகம் போன்றவைகளும் இடம்பெற்றிருந்தன. 

இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் இரா.முத்தரசன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுப் பேசினர். "தமிழர்கள் நாங்கள், தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு வழக்குரைஞர் அ.விஜயலட்சுமி தலைமை தாங்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர் லஜபதிராய் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

d2

மேலும், வழக்குரைஞர்கள் “பெரியாரின் சமதர்மக் கொள்கையும், இடதுசாரி முன்னெடுப்புகள்” என்ற தலைப்பில் ஜோ.கென்னடி, “கடவுள், மதம், மறுத்த பகுத்தறிவுப் பகலவனாய் தந்தை பெரியார்” என்ற தலைப்பில் பெ.கனகவேல், “பெரியாரின் சமூகநீதி, இடஒதுக்கீடுக்கான போராட்டங்களும், வெற்றிகளும்” என்ற தலைப்பில்அ.கம்ருதீன், “பெண்ணடிமை விலங்குடைத்த பேரராசன் தந்தை பெரியார்” என்ற தலைப்பில் சேலம் வழக்குரைஞர் தமயந்தி, “ஜாதி எனும் சதி தகர்த்த தலைமைசால் தந்தை பெரியார்” என்ற தலைப்பில் இ.அங்கயற்கண்ணி, “பெரியாரின் ‘இறுதிப் பேரூரை’ காட்டும் திசை வழி” என்ற தலைப்பில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.பானுமதி ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக கருத்தரங்கிற்கு வந்தவர்களை வழக்குரைஞர் கு.பாரதி வரவேற்றார். நிறைவாக வழக்குரைஞர் லியோ பொட்டுமணி நன்றி கூறினார். கருத்தரங்கைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் கலை அறப்பேரவை சென்னை கலைவாணன் குழுவினரின் பொம்மலாட்டக்
கலைக்குழு வழங்கும் அறிஞர் அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' எனும் நாடகம், புதுமையான பொம்மலாட்ட
வடிவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் சீதா குத்தாலிங்கம் தலைமை வகித்தார். திரைப்பட நடிகரும், நாடகத்துறை தலைவரும், தஞ்சை தமிழ்ப்பல் கலைக் கழக பேராசிரியருமான மு.இராசாமி நாடகத்தைத் தொடங்கி வைத்துச் உரையாற்றினார். இந் நாடகத்தைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா.முத்தரசன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

தொடர்ந்து மாலை 7 மணியளவில் நிறைவரங்கம் நடைபெற்றது.  இந் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் வழக்குரைஞர் தமயந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் த.பானுமதி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் மு.நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அ.க.திராவிட மணி, ஏ.அய்.டியூ.சி தலைவர் க.சுரேஷ், என்.எப்.அய்.டபிள்யூ மாவட்ட செயலாளர் க.ஆயிஷா, வழக்குரைஞர் இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறைவரங்கத்தில் "பெரியார் விரும்பிய தமிழகம் காண்போம்" என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினர். அவர் பேசுகையில், "சமூக நீதி,சாதி ஒழிப்பு, பெண் அடிமைதனம் ஒழிப்பு இது தான் பெரியார் காண விரும்பிய இந்தியாவாக இருந்தது. 70 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்பும் படிக்க உரிமை கேட்டு போராடிக் கொண்டு இருக்கிறோம். செவ்வாய் கிரகத்துக்கே மனிதர்கள் செல்கிறார்கள்; ஆனால் கோவில் கர்ப்பகிரகத்திற்குள் இன்றும் அனைத்து மக்களும் செல்ல முடியவில்லை.

பெண்களைத் தொடர்ந்து அடிமைகளாக  இந்தச் சமூகம் வைத்திருந்தது. ஆணுக்கு ஒரு நீதி,பெண்ணுக்கு ஒரு நீதி என வேறுபட்டதாக நீதி இருந்தது.இதை அடித்து உடைத்தவர் பெரியார். பெரியாரின் பார்வை விஞ்ஞானப் பார்வையாக இருந்தது. நேருவால் நிறைவேற்ற முடியாத பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி கூடாது என்பது போல பெண் அடிமைத் தனமும் கூடாது என்றார் பெரியார். பெரியார் இந்த சமூகத்தைப் பண்படுத்தவே பாடுபட்டார். அவர் பேதமற்ற சமுதாயத்தைக் காணவே விரும்பினார்" என்று பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசும் போது, "பெரியாரின் முக்கியத் திட்டங்கள் இரண்டு. ஒன்று ஜாதி ஒழிப்பு மற்றொன்று பெண்ணடிமை ஒழிப்பு. ஜாதி ஒழிப்புக்காக அவர் யாரிடமும் கூட்டணி சேருவதற்கும் தயாராக இருந்தார். ஜாதி ஒழிப்பைப் போன்று பெண் உரிமைக்காகவும் அவர் பல்வேறு வழிகளில் போராடி வந்தார். பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை சமுதாயத்திற்காவும், மனிதன் முன்னேற்றத்திற்காக முன்னெடுத்த பெரியார் அவருக்கான தனித்துவத்தோடு வாழ்ந்தார்" என்று பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தமிழ் மாநில குழு செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், "இன்றைக்கு பலர் புதிய கட்சிகள் தொடங்குகிறார்கள், யாரையும் வரக் கூடாது என நாம் சொல்ல கூடாது.  கட்சி தொடங்கிய அனைவரும் நிலைத்து நிற்பதில்லை. ஆனால் சமூக விஞ்ஞானியான தந்தை பெரியார் நேற்றும் இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார்.

தமிழகத்தில் இருந்த ஆணவப் படுகொலை இன்று ஆந்திராவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதைப் பெற்றோரே செய்கிறார்கள். ஜாதியின் மீதுள்ள வெறியின் காரணமாக இது நடக்கிறது. இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் மருத்துவர் உள்ளிட்ட பொறுப்புக்களுக்கு வந்தவர்கள் கூட, தற்போது இட ஒதுக்கீடு தங்களுக்கு தேவையில்லை என்கிறார்கள். சமூகநீதிக்கான போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெரியார் பிறந்தநாள் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பெரியார் சிலையை சிலர் அவமதிக்கிறார்கள். இதற்காக ஒட்டு மொத்தத் தமிழனுக்கும் ஆத்திரம் வர வேண்டும். தமிழக அரசு ஆரம்பித்திலேயே இதற்கு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. பெரியாரின் கொள்கை தொடர்ந்து வளர்ந்து இறுதியில் வெற்றி பெறும். காரணம், அது விஞ்ஞானம். நம் நாட்டில் மனு தர்மத்திற்கு எதிரான யுத்தம் நடைபெறும்; அதில் கருப்பும் சிகப்பும் ஒன்றாக இருந்து போராடும்" என்றார்.

நிகழ்ச்சியில் பெரியாரின் பிறந்த தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரைச் சூட்ட வேண்டும். பெரியாரின் கருத்துக்களையும், கொள்கைகளையும், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்விப் பாடத் திட்டங்களில் பாடமாக வைக்க வேண்டும்.

ஜாதி மறுப்புத் திருமணம், விதவை மறுப்பு திருமணம், செய்பவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கவும், அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கவும், அரசாணை பிறப்பிக்க வேண்டும். மணவிலக்கு உறுதிப்படுத்த உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். தனித்து வாழ விரும்பும் பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கான தங்கும் விடுதிகள் அமைத்துத் தரவேண்டும். பெண்கள் மீதான வன்முறைகளையும், குற்றங்களையும், விசாரிக்கவும், வழக்கு பதிவு செய்யவும், காவல் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும், அநாகரீகமாகப் பேசிய, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான எச் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் வழிபாடுகள் நடத்த தடை இருந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடிய நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்திலும், உயர்நிதிமன்றத்திலும், நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  d1

மேற்கண்ட தீர்மானங்களை வழக்குரைஞர்கள் ஜெ.சுதா, நா.பாரதி, இரா.கவிதா, செ.கனிமொழி ஆகியோர் வாசித்தனர். இந் நிகழ்ச்சிகளை த.மு.பெ.வ.ச. பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி ஒருங்கிணைத்து வழங்கினார். நிறைவாக வழக்குரைஞர்கள் செ.வளர்மதி, மோ.பிரியா ஆகியோர் நன்றி கூறினர்.

இந் நிகழ்ச்சியில் ஏராளமான வழக்குரைஞர்களும், பொதுமக்களும், திராவிடர் கழக நிர்வாகிகள் செந்தமிழினியன் மற்றும் பொறுப்பாளர்களும், அனைத்து சமூக இயக்கங்களும் திரளாக பங்கேற்றிருந்தனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz