தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அவ்வைப் பிராட்டியாருக்கு அருநேல்லிக்கனி ஈந்த தகடூரை ஆண்ட மன்னன் அதியமானால் சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு இராகுகால பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரைத் தரிசித்து வழிபட்டனர்.
காலபைரவர் கோவிலில் சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றில் விளக்கேற்றினால் படிப்பு, தொழில், செல்வம் சிறக்கும் என்றும் திருமணத் தடை நீங்கும், குழந்தையின்மைக் குறை நிவர்த்தியாகும் என பக்தர்கள் பயபக்தியோடு கூறுகின்றனர்.
அஷ்டமி இரவன்று 1008 கிலோ காய்ந்த மிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு காலபைரவருக்கு சிறப்பு யாகம் செய்யப்படுகிறது.
நேற்றைய தினம், காலபைரவர் தங்க கவச்ம் அணிந்து ராஜ அலங்காரத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துப் பரவசப்படுத்தினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி சிறப்புப் பூஜையினைக் காண வந்திருந்தனர்.