புதுடெல்லி,
2018-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள், ஆன்-லைனில் விற்பனை செய்யப்படுகிறது என தி வையர் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டது. மாணவர்களின் முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி அடங்கிய தகவல்களை இணையதளம் ஒன்று ரூ. 2 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது என தகவல் வெளியிட்டது. தகவல் வெளியானது தொடர்பாக சிபிஎஸ்இக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இன்று இவ்விவகாரத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கே.சி. வேணுகோபால் மக்களவையில் எழுப்பி பேசினார்.
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய கே.சி. வேணுகோபால், “தகவல்கள் வெளியான விஷயம் மிகவும் முக்கியமானது... இது தனிப்பட்ட தகவலை திருடும் பிரச்சனையாகும். இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் சமரசம் செய்கிறது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் வெளியானது தேர்தல் நடைமுறை தொடர்பாக கேள்வியை எழுப்புகிறது. தகவல்களை வாங்குபவர்கள் ரூ. 2 லட்சம் வரையில் கொடுக்க தயாராக உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.