தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளும் அரசை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து ஆளும் அ.தி.மு.க. அரசு திமுகவுக்கு எதிராகவும், இலங்கையில் போர் மூண்டதற்கு காங்கிரஸும் தி.மு.க.வும்தான் காரணம் என்பதை சுட்டிக் காட்டும் எதிர் கண்டன கூட்டத்தை நேற்றிரவு தமிழகமெங்கும் நடத்தியது பரபரப்பாக பேசப்படுகின்றது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அதிமுக கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் புறநகர் மாவட்ட செயலாளருமான எம்பி ரத்தினவேல் ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநகர் மாவட்ட செயலாளரும், எம்பியுமான குமார் பேசும்போது;
"இந்த கூட்டத்தின் வாயிலாக அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மனோகரனுக்கு 2 சவால்களை நான் வைக்கிறேன். ஒன்று அடுத்து தமிழகத்தில் வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, நீங்கள் நின்றால் எங்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக இருக்கும் பொம்மாசி பாலமுத்துவை நிறுத்துகிறோம். முடிந்தால் அவரை எதிர்த்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.
இரண்டாவதாக, திருச்சி மாவட்டத்தில் எங்கே வேண்டுமானாலும் நீங்கள் தினகரனை அழைத்துக் கூட்டம் நடத்துங்கள்; நாங்களும் பொம்மாசி பாலமுத்துவை அழைத்துக் கூட்டம் நடத்துகிறோம். அதில் ஒரு கட்டுப்பாடு..... திருச்சியி்ல் உள்ள நபர்களை அழைத்துத்தான் கூட்டம் நடத்த வேண்டும்.
நாங்கள் ஆதார் கார்டுகளுடன் திருச்சி தொண்டர்களை அழைத்து வருகிறோம். அதே போல, மனோகரனும் ஆதார் அட்டைகளுடன் தொண்டர்களை அழைத்து வரவண்டும்.... அப்போது தெரிந்து போகும் யாருக்கு செல்வாக்கு என்று....." என எம்பி குமார் சவால் விட்டு பேசினார்.
கூட்டம் என்னவோ திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக நடத்தப்பட்டதுதான் என்றாலும் கூட்டம் முழுவதிலும் பெரும்பாலும் அ.ம.மு.க. கட்சியை விமர்சித்துதான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.