திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இங்கு, காசியில் அகோரி பயிற்சி பெற்றதாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூஜைகள், ஏவல், சூனியம் போன்றவற்றினைச் செய்ய ஏகப்பட்ட பயிற்சிகள் கொடுப்பதாக விளம்பரப்படுத்துகிறார்.
மணிகண்டனின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரைத் தேடி திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரைக்கு வரத் தொடங்கினர். இது மட்டுமல்லாமல் விஷேச காலங்களில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள், உள்ளிட்டவைகளும் ஜெய் அகோர காளி கோவிலில் மணிகண்டனால் நடத்தப்படுவது வழக்கம்.
இந் நிலையில் அகோரி மணிகண்டனின் தாயார் மேரி காலமானர். அவரது உடல் அடக்கம் செய்ய அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வழக்கமான இறுதிச் சடங்குகளை அவரது உறவினர்கள் செய்தனர். இதன் பின்அகோரி மணிகண்டன் தனது தாயார் உடல் மீது அமர்ந்து மகாதேவ மந்திரங்கள் சொல்லி, இறுதிச் சடங்குகள் செய்தார்.
அவருடன் சக அகோரிகள் உடுக்கை, மேளம் அடித்து, சங்கு முழங்க அகோரி பூஜை நடந்தது. இதையடுத்து மேரியின் உடலுக்குத் தீபாராதனை செய்து நல்லடக்கம் செய்தனர். இடுகாட்டில் நடந்த அகோரிகளின் விசித்திர பூஜை, அந்த பகுதி மக்களுக்கு ஒருவித பயத்தினை ஏற்படுத்தியது.
ஏற்கனவே அகோரி மணிகண்டன், திருச்சி சங்கிலியாண்புரம் சுடுகாட்டில் நிர்வாணபூஜை செய்தும், தலைச்சம் பிள்ளையின் ஏலும்புக்காக வீதியில் சுற்றி வந்தும் பொதுமக்களிடையே ஒருவிதமான பீதியினை ஏற்படுத்தி இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைத்து போலிசில் புகார் செய்து மணிகண்டனை வலுகட்டாயமாக சுடுகாட்டில் இருந்து வெளியேற்றினார்கள். அதேபோல் தி.க.வினருக்கும் 'அகோரி' மணிகண்டனுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ‘பில்லி சூனியத்தால் ஒருவரை அழிக்க முடியும் என்பது பொய்’ என்றும், தனக்கு பில்லி சூனியம் வைத்து அதை உண்மையென நிரூபிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தரப்போவதாகவும் அறிவித்திருந்தார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன். இதற்குப் பதிலடியாக ஜெய்னுலாபிதீனுக்குத் தான் பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும், 48 நாட்களுக்குள் ஜெய்னுலாபுதீன் பில்லி, சூனியத்தால் தற்கொலை செய்து கொள்வார் என்றும் ‘அகோரி’ மணிகண்டன் கூறியிருந்தார்.
அது போல எதுவுமே நடக்கவில்லை என்றாலும் தன்னைப் பற்றிய அச்ச உணர்வை மக்களிடையே வளர்த்து வரும் மணிகண்டன் போன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகப் பகுத்தறிவாளர்களின் கருத்து உள்ளது.