இந்தியாவிலேயே முதன்முறையாக, கும்பகோணத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தினை சிட்டி யூனியன் வங்கியின் நிதியுதவியுடன் நகராட்சி நிர்வாகம் திறந்தது. அதற்கடுத்தப்படியாக திருச்சியில் அந்த வங்கியின் உதவியுடன் சுமார் 5 இடங்களில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் குளிரூட்டப்பட்டப் பயணிகள் நிழற்கூடங்களைத் திறந்து வைத்தது.
திருச்சியில் திறக்கப்பட்ட 5 'குளு குளு' வசதிகொண்ட பயணிகள் காத்திருப்பு நிழற்கூடங்களும் தற்போது உருக்குலைந்த நிலையில் பார்க்கவே பரிதாபமான நிலையில் உள்ளன. இந்த நிழற்கூடங்களில் நிறுவப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர்களைக் காணவில்லை; பயணிகள் அமரப் போடப்பட்டிருந்த நாற்காலிகள் உடைந்து சிதிலமாகக் காணப்படுகின்றன.
முன்பு அமைக்கப்பட்டிருந்த 'குளு குளு' வசதிகொண்ட பயணிகள் காத்திருப்பு நிழற்கூடங்கள் ஐந்தும், வடிவேலுவின் காணமற்போன கிணறு ஜோக்கினை நினைவுபடுத்தும் விதமாகக் காணவில்லையே என பொதுமக்கள் புலம்பிய நிலையில் மீண்டும் அதே போன்று ஒரு திட்டத்தைத திருச்சி மாவட்ட நிர்வாகம் கொண்டு வரவிருக்கின்றது.
புதிய குளு, குளு நிழற்குடை அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தை திருச்சி மாவட்ட நிர்வாகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகக் குளு, குளு அரங்கில் அண்மையில் நடத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணியினை உணராமல் மாநகரக் காவல்துறை ஆணையரும் இதற்கு ஒத்துழைப்பது வேதனைகுரியது என்கின்றனர் திருச்சியினைச் சேர்ந்த மக்கள்நல ஆர்வலர்கள்.
திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டு முயற்சியின் காரணமாக சிட்டி யூனியன் வங்கியின் உதவியோடு திருச்சி மாநகரப் பகுதிகளில் உதயமான மு(பி)ன்னோடி திட்டம் தான் " ஏர் கன்டிசனர்" வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு நிழற்கூடங்கள். எப்.எம்.ரேடியோ, காயின் பாக்ஸ் பொதுத் தொலைபேசி, 24 மணி நேர சேவையுடன் கூடிய ஏ.டி.எம் போன்ற வசதிகளுடன் இந்தக் கூடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
மாநகரின் மையப் பகுதியான திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் குளு, குளு வசதி கொண்ட புதிய பயணிகள் நிழற்கூடங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இவற்றைத் திறந்து வைத்தனர். திருச்சி மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், கே.கே.நகர் என மேலும் சில இடங்களிலும் இந்தத் திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்பட்டது.
முன்னோடித் திட்டமாகக் கூறப்பட்ட இத் திட்டத்தால் பொது மக்கள் பயனடைந்தார்களா என்றால் அது குறைவுதான். ஆனால், காந்தி மார்க்கெட் பகுதிகளில் பூ கட்டிப் பிழைப்பு நடத்தும் தாய்மார்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் சில வாரங்கள் குளு, குளு காற்று வாங்கியது மட்டுமே இதனால் கிடைத்த தற்காலிக நன்மை.
சில இடங்களில் செக்யூரிட்டிகள் மட்டுமே முழுவதுமாக இவற்றைத் தங்களுக்கானத் தங்குமிடமாகவும், ஓய்வெடுக்கும் அறையாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்தச் சூழலில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டிருந்த இருந்த குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் என்பது தடமே தெரியாத வண்ணம் முழுவதுமாக உருமாறிக் காட்சியளிக்கிறது.
இந்த பேருந்து நிறுத்ததிற்கென்று பிரத்யேகமாக அமைக்கபட்ட ஏ.சி உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் தற்பொழுது அங்கு இல்லை. இவை எங்கு போயின? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவை சமூக விரோதிகளால் களவாடப்பட்டனவா? அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிளே அவற்றினை அபகரித்துக் கொண்டனரா? என்று உரத்தக் குரலில் எழும் மக்களின் கேள்விகளுக்கு இன்று வரையில் விடையே இல்லை. மொத்தத்தில் இந்தத் திட்டத்தால் மக்களின் பணம் வீணடிக்கப் பட்டது மட்டும் நிதர்சனமான உண்மை.
முன்பிருந்த 'குளு குளு' சாதனங்கள் என்னவாயிற்று என்பதே தெரியாத நிலைமையில் மீண்டும் புதிதாக 4 'குளு குளு' வசதி கொண்ட புதிய பயணிகள் நிழற்கூடங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி தலைமையில், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்கூடங்கள் அமைப்பது மற்றும் அந்த பயணிகள் நிழற்கூடங்களை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகமே பராமரிப்பது தொடர்பாகவும், அதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சம்பந்தமாகவும் ஆலோசனைகள் நடந்தன.
ஏற்கனவே துவங்கிய 'குளு, குளு' வசதி கொண்ட பயணிகள் நிழற்கூடங்கள் அலங்கோலமாகப் பயன்படுத்த முடியாத நிலைமையில் உருக்குலைந்து கிடப்பதன் காரணம் என்னவென்று மக்களுக்குத் தெரிவிக்காமல் புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப் போல, மீண்டும் அதே திட்டத்தைப் புதுவடிவில் கொண்டுவர நினைப்பது ஏன்? விழலுக்கிறைத்த நீராய்ப் பணத்தை வீணடிக்கலாமா? என்றே இத் திட்டம் குறித்து திருச்சி மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.
- க.சண்முகவடிவேல்.