தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் நலனுக்காக “தமிழ் ஊடக எழுத்தாளர்கள் நலச்சங்கம்” சேலம் மாவட்டம், ஆத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இந்தப் புதிய அமைப்பு தினமணி ஆசிரியர் வைத்தியநாதனால் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ் ஊடக எழுத்தாளர்கள் நலச்சங்கத்தினைத் தொடங்கி வைத்துப் பேசிய தினமணி ஆசிரியர் வைத்தியநாதனது உரையின் முக்கிய பகுதிகள்....
“ஒரு மாவட்ட ஆட்சியர் என்பவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் உருவாகிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் தேர்தலில் வெற்றி பெறும்போது உருவாகிறார். ஒரு வியாபாரி என்பவர் வணிகத்தில் ஈடுபட்டு இலாபம் ஈட்டும்போது உருவாகிறார்.
ஒவ்வொரு துறையிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுகின்றவர்கள் அதில் வெற்றி பெறும்போது அவர்களை அந்தத் துறைக்குத் தகுதியுள்ளவர்களாகத் தேர்வு செய்கிறது இந்தச் சமுதாயம். ஆனால், ஒரு செய்தியாளர் என்பவர், தான் படித்துப் பட்டம் பெற்று வேலைக்கு வந்த பின்னர், இந்த சமூகத்தில் உள்ள குறைகளை எல்லாம் வெளியுலகத்துக்குக் காட்டுகின்ற பொறுப்பிற்கு வந்த பிறகு உருவாகின்றவர் இல்லை.
அறம் பிறழாத ஊடவியலாளர் என்பவர், அவரது தாயின் கருவில் இருக்கும் போதே தன்னை ஒரு சிறந்தச் செய்தியாளனாக இந்த சமூகத்தில் இணைத்துக் கொள்கிறார். பணம், புகழ், சொத்து, சுகம், குடும்பம் என எதற்கும் ஆட்படாமல், இந்தச் சமூகத்தில் தன் கண் முன்பாக நடக்கும் குறைபாடுகளைத் தீர்க்க வேண்டும், இந்த மானுட சமூகத்துக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லேயே என்ற தனது ஏக்கம் எழுத்து வடிவம் பெற்று, அது இதழில் அச்சாகி வருகின்ற போதுதான் அவன் மனம் திருப்தியடைகிறது.
உலகிலுள்ள பல முன்னேறிய நாடுகளில் எல்லாம் இதழியல் துறையில் பணியாற்றுவோருக்கு என பல சிறப்புப் பாதுகாப்புச் சட்டங்களும், சிறப்பு அதிகாரங்களும் உள்ளது. ஆனால், உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் அப்படிப்பட்டச் சிறப்புச் சட்டங்கள் எதுவும் ஊடகத்துறையினருக்கு வழங்கப்படவில்லை.
இந்த நாட்டில் தனக்கென எந்தவொரு தனிப்பட்ட பாதுகாப்பும், உரிமையும் வழங்கப்படாத நிலையிலேயே இந்திய ஊடகத்துறையில் உள்ள செய்தியாளர்களாகிய நீங்கள், ஒரு மிகச்சிறந்த போராளிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, இந்த நாட்டில் மக்கள் நலனுக்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் நடக்கும் அனைத்து அநீதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
அதனால்தான் சொல்கிறேன் அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டக் குணம் என்பது நீங்கள் பதவிக்கு வந்த பின்னார் உங்களுக்கு வந்ததில்லை. உங்கள் தாயின் கருவில் இருக்கும் போதே இந்தப் போராட்டக் குணம் உங்களுக்கு, உங்களின் இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்தே வந்திருக்கிறது.
நான் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே, என்னுடைய நண்பர்களுடன் சேர்த்து சேதுபதி என்ற ஒரு பத்திரிகையை நாற்பது பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதி நடத்தியவன்.
1967-ஆண்டு பொதுத தேர்தலுக்கு சில மாதம் முன்பாக மதுரைக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஆவர்களைச் சந்தித்து என்னுடைய புத்தகத்தைக் காட்டிவிட்டு, அவரைப் பற்றி அடுத்த புத்தகத்தில் எழுதலாம் என்ற ஆர்வத்தில், அவர் தங்கியிருந்த பயணியர் விடுதிக்குச் சென்றேன்.
நான் வந்திருக்கும் செய்தியை அவரது உதவியாளர் வைரவன் அவர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு வெளியே வந்த காமராஜர் அவர்கள், அரைக்கால் ட்ரவுசருடன் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து “என்ன பத்திரிகை நடத்துறேன்னேன்... படிக்கிற வயசுலே ஒழுங்காப் படிக்காமே இந்த வேலையெல்லாம் உன்னை யார் செய்யச் சொன்னதுன்னு...” கேட்டவர், “ஒழுங்கா வகுப்புக்கு போகலேன்னா உங்க தலைமையாசிரியர் கிட்டே சொல்லீருவேன்...” என்று சொல்லி நான் கொண்டு போயிருந்த நோட்டுப் புத்தகத்திலேயே என் தலையில் இரண்டு அடி வைத்து என்னை அங்கிருந்து அனுப்பினார்.
அதற்குப் பிறகும் என்னுடைய ஊடகத்துறையின் மீதான என்னுடைய ஈடுபாடு குறையவில்லை. தொடர்ந்து நான் இந்த துறையிலேயே ஈடுபட்டு வந்த நான் 1973-ஆண்டு வாக்கில் காமராஜரைச் சந்தித்தபோது, துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் என்னை காமராஜருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“தெரியும்... தெரியும், இந்த வேலைக்கு வராதேன்னு சொல்லி இவன் தலையிலேயே நாலு சாத்து சாத்தி அனுப்பினேன். ஆனாலும், இவன் இந்த வேலையை விடவில்லை... என்று காமராஜர் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.
ஊடகத்துறையில் பணியாற்றி வரும் ஒவ்வொரு நண்பர்களுக்கும், எனக்கு இந்தத் துறையில் உள்ளதைப் போலவே அவர்களுக்கும் ஒரு பெரிய ஈடுபாடு இருந்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள அந்த ஈடுபாடு அவர்களின் உயிருள்ள வரைக்கும் குறையவே குறையாது. உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த ஈடுபாடுதான் “ஊடக அறம்” எனபதாகும்.
இந்த ஆத்தூரில் உள்ள ஒரு செய்தியாளர் இந்த ஊரில் உள்ள விவசாயம், ஏரி, குளம், சாலை வசதி, குடிநீர் பற்றாக்குறை, சுகாதாரக் குறைபாடு என மக்களுக்கு தேவையான எதாவது ஒரு குறையைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்.
சேலத்தில் உள்ளவர்கள் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சனையை மையமாக வைத்து போராடுகிறார்கள். சென்னையில் உள்ளவர்கள் மாநிலத்தின் பிரச்சினையையும், தில்லியில் உள்ளவர்களும் நாட்டு மக்கள் பிரச்சனைக்காகவும் போராடுகிறார்கள். சமூக முன்னேற்றத்துக்காக போராடும் இந்த நடைமுறைதான் “ஊடக அறம்” என்பது.
ஒரு இதழின் ஆசிரியர் என்ற வகையிலே நானும், என்னுடன் இருக்கும் துணையாசிரியர்கள், இதழ் வடிவமைப்பாளர், அதை அச்சிட்டு வெளியிடுபவர் என இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள எல்லோருமே ஒரு தரமான செய்தி வெளியாவதற்கு துணையாக இருக்கிறோம் என்ற பெருமை மட்டுமே எங்களுக்கு உள்ளது.
அந்தச் செய்தியை எழுதிய செய்தியாளருக்குத்தான் வெற்றிக்கான முழு பங்களிப்பும் உரியதாகும். அந்த வகையிலே அறம் தவறாத செய்தியாளர்கள் நாட்டில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த மானுட சமூகத்துக்கான முழு உரிமையும் இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு கிடைக்கும்” என்று பேசினார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.
ஆத்தூர் துளுவவேளாளர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி வட்டாரத்தை சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.