பாவலர் அறிவுமதி அவர்களை பார்க்கும் போதெல்லாம் பை நிறைய கனத்த புத்தகங்களுடன் இருப்பார். தோள் வலிக்க, கை வலிக்க தூக்கி சுமந்த அந்த புத்தகங்களின் வலிதான் இந்த புத்தகத்தில் இறக்கி வைக்கப்பட்டிக்கின்றது.
சிவன் யார்? அவன் முருகனுக்கு அப்பனா? எனில் எப்படி, எப்போதிலிருந்து?
வினாயகன் என்கிற பிள்ளையார் யார்.? அவன் முருகனுக்கு அண்ணனா? எனில் எப்படி? எப்போதிருந்து? யார் புகுத்தினார்கள்?
முருகன் என்பவன் குறிஞ்சி நிலத்தை ஆண்ட மன்னன். பிறகு ஏன் கடவுள் ஆனான்? எப்படி? இந்த தமிழ் முருகன் எப்படி நெய்தல் நிலத்திலும் வணங்கப்படுகின்றானே எப்படி?. குறிஞ்சிக்கும் நெய்தலுக்கும் சேர்ந்து ஆண்ட மன்னனாக முருகன் இருந்தான் என்றால் எப்படி?
மலைகளின், குறிஞ்சி நிலத்தின் மன்னனான முருகனுக்கு வள்ளி மட்டுமே மனைவி? பிறகு எப்படி தெய்வானை குறுக்கே வந்தாள்? எப்போது, யாரால் புகுத்தப்பட்டாள்? அதற்கான காரணம் என்ன? ஒரு மொழி ஆய்வாளர் திராவிடக் கடவுள் முருகன் என்கிறாரே எப்படி?
நாம் காவடி தூக்கிக்கொண்டு செல்கிறோமே? அது ஏன்?
இப்படியான பல கேள்விகளுக்குமான பதில் இந்த புத்தகத்தில் சங்கத்தமிழ் இலக்கிய நூல்களின் மேற்கோள்களுடன் கம்பீரமாய் நடக்க விட்டிருக்கின்றார் பாவலர் அறிவுமதி. வெறும் நூல் அல்ல, தமிழ் மண்ணின், தமிழர்களின், வெகுமதியான சொத்து இது.
நூற்றில் அல்ல, லட்சத்தில் ஒருவருக்கே இப்படி வாய்க்கும். பாவலருக்கு வாய்த்திருக்கிறது. வார்த்திருக்கின்றார்.
இந்த நூலின் வியக்க வைக்கும் ஒரு முக்கியமான பகுதி.....
ஆடிக்கிருத்திகை
முருகனுக்கு உகந்த நாள்.
படையல் போட்டு, காவடி எடுத்து..
நல்ல விசயம்தான்.!
அந்த படையல் எல்லாம் வெஜிடேரியனாகவே இருக்கிறதே ஏன்? முருகனுக்கு அப்படித்தான் படைக்க வேண்டுமா?
முருகன் கறி-(இறைச்சி) ஏற்கமாட்டாரா?
ஏற்பாரே. அதுதானே அவருக்கு படைக்கப்பட்டது. அதுதானே வழக்கமாக இருந்தது. ஆதாரம் இருக்கின்றதே.
மறிக்குரல் அறுத்துத் தினைப் பிரப் பிரீஇ- குறுந்தொகை-263
அதாவது முருகனுக்கு ஆடு அறுத்து பலி கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் குறுந்தொகை-263 பாடல் கூறுகிறது.
குறுந்தொகை-362,,ல் ‘சிறுமறி கொன்று’ என்பதும் முருகனுக்கு ஆடு அறுத்துக் குறுதிப் பலி கொடுத்ததை கூறுகிறது.
அய்யா இரா. இராகவையங்கார்..’மறிக்குரல் அறுத்து’ என்பதற்கு வெள்யாட்டுக் குட்டியின் கழுத்தை அறுத்து என்றும், ‘சிறுமறி கொன்று’ என்பதற்கு ஆட்டின் சிறிய குட்டியைக் கொன்று என்றும் உரையெழுதியுள்ளார். (பக்கம்-426-பக்-587)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி எழுதிய தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் கூட, “குறிஞ்சிநில மக்களால் செய்யப்பட்டதாக மேலே கூறப்பட்ட முருக வழிபாட்டில் வேதங்களிலோ ஆகமங்களிலோ அறிவுபெற்ற புரோகிதர்கள் இடம் பெறவில்லை என்பது கவனத்திற்குறியது.
குறிஞ்சிநில மக்கள் தாங்கள் தொன்று தொட்டு வழிபட்டு வந்த முறையிலேயே வழிபட்டு வந்தார்கள்” என்று தம் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் (பக்கம்-510) கூறுகிறார்.
சாதாரணமாக ஒன்றிரண்டு புத்தகங்களை படித்துவிட்டு மேற்கோள் காட்டி பேசுவது எளிது. ஏராளமான சங்க இலக்கிய நூல்களில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மேற்கோள்களை எடுத்து காட்டியிருப்பது அவரின் கடும் உழைப்பையே காட்டுகிறது.
புத்தகம் வேண்டுவோர், 8754448076, 9940596585, 8754448076 என்ற தொலைபேசிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
-பா.ஏகலைவன்