பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Monday 10, September 2018, 18:44:15

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதைக் கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சி தனது தோழமைக் கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது.

 சேலம் தலைமைத் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்துக்கு சேலம் மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.  சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.

 ஆர்பாட்டத்தில் பெட்ரோல், டீசல்விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெட்ரோல், டீசலை விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதனை வலியுறுத்தினர். மேலும் சமையல் எரி வாயு விலையும் உயர்ந்து வருவதை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எரி வாயு சிலிண்டரை எடுத்து வந்தும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல், டீசலை விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 இந்த ஆர்பாட்டத்தில், திமுக மத்திய மாவட்ட அவை தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கட்சி பொது குழு உறுப்பினர் வேங்கடபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், உள்பட எராளமானனோர் கலந்து கொண்டனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz