உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி; முதல் மொழி தமிழ் என்பதில் ஐயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிலத்தில் கிணறு தோண்டி விவசாயம் செய்தவர்களும் தமிழர்கள்தாம். பல்வேறு முன்னேறிய சமூகங்களில் எழுத்து வடிவம் தோன்றிய காலத்திற்கு முன்பாகவே, தமிழர்கள் பனை ஓலைச்சுவடிகளில்தான் தங்களின் இலக்கியங்களையும், வரலாறுகளையும் பாடல்களாக எழுதினார்கள்.
3500-ஆண்டுகளுக்கு முந்திய தொல்காப்பியமும், 2000ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளும் பனை ஓலைகளின் மூலம்தான் காலகாலமாகக் காப்பாற்றப்பட்டு இன்று நம் கைகளுக்கு கிடைத்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழியையும், தமிழகத்தின் கிணறுகளையும் வற்றாமல் வைத்திருந்த பனை மரங்கள் தமிழர்களின் முகவரியும் கூட!
தமிழ்மொழி வளர்ந்ததற்குப் பனை ஓலைச்சுவடிகளை முக்கியக் காரணமாகச் சொல்லலாம். பனை மரங்களுக்கும் தமிழர்களுக்கும் நீண்டகாலத் தொடர்பு உள்ளது. ஆப்பிரிக்காவில் தோன்றியதாக நம்பப்படும் பனைமரம் தமிழர்களுடனே பயணம் செய்கிறது. இந்தியா, இலங்கையின் தமிழீழ பகுதி, மலேசியா, கம்போடியா, இந்தோனேஷியா, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா என தமிழர் வாழும், அல்லது வாழ்ந்த பகுதிகளில் மட்டுமே பனைமரங்களும் வாழுகிறது.
இலங்கையில், பனைமரங்களைப் பாதுகாக்கவும், அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யவும் பனை வளர்ச்சித்துறை என்று தனியே ஒரு துறையே உள்ளது. இதற்கென தனி ஒரு அமைச்சரையும் நியமனம் செய்துள்ள இலங்கை அரசு, பனைமரத்தின் பயங்களை மக்களுக்குச சொல்லிக் கொடுக்கிறது. மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவுத் தயாரிப்புக்கானதாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணெய்தான் நம் ஊரில் சந்தையில் கிடைக்கும் அனைத்துவகை எண்ணெய்களிலும் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.. பனை வளர்ப்பதற்காக மலேசிய அரசு பல ஆயிரம்கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
1801-ஆண்டு, காவேரி ஆற்றின் கரையோரமாகப் பயணம் மேற்கொண்டிருந்த பிரான்சிஸ் புக்கன்னன் என்ற ஆங்கிலேயே மருத்துவர், மேட்டூர் அருகில், நவப்பட்டி என்ற ஊருக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து யானை, எருமை போன்ற விலங்குகள் மக்கள் வசிக்கும் நிலப்பகுதிக்கு வராத வகையில், காட்டுப்பகுதியில் ஐம்பதாயிரம் பனைமரங்கள் வரிசை வரிசையாக நடப்பட்டிருந்ததாகவும், இதனால், சுற்றிலுமிருந்த ஒன்பது ஊர்களில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வந்ததாகவும் A Journey from Madras through the countries of Mysore, Canura and Malabarவில் என்ற தனது பயண நூலில் கூறிப்பிட்டுள்ளார்.
சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. திருக்குடந்த அருணாசலக் கவிராயர் என்பவர் இயற்றியுள்ள “தால விலாசம்” என்ற நூலில், பனைமரத்தின் மூலம் மனித சமூகத்துக்கு 801 வகையான பயன்கள் கிடைப்பதாகக் கூறியுள்ளார்.
பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சைக் குருத்து உண்பதற்குச் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். குறிப்பாக, கருவுற்ற பெண்களுக்கு இதை கொடுப்பார்கள். வளர்ந்து மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுக்கவும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்யவும் பயன்பட்டது.
கடுமையான வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குத் தீவனமாக பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும். ஓலைகளின் மேலே உள்ள ஈக்கிகளை சேர்த்துக் கட்டி, வீடு கூட்டும் துடப்பமாகப் பயன்படுத்தலாம்.
பனைமரம் பாளை விடும்போது, அந்த பாளையிலிருந்து பதநீர் கிடைக்கும், அதில், பதநீர் இறக்கும் பானையில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையான, கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும். சிலநாள் கள் இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும். இந்த காய்களில்தான் குறிப்பிட்ட பருவத்தில் நுங்கு கிடைக்கும்.
அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பனங்காயிலிருக்கும் சதைப் பகுதியைக் கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம். பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். மனிதர்கள் மற்றும் கால் நடைகள் இந்தப் பழத்தை உண்டு விட்டுப் போடும் கொட்டை முளைவிட்டு வளரும்.
கொஞ்சநாள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை, குழந்தைகள் உன்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மஞ்சியைக் கொண்டு மெத்தை, தலையணைகள் தயாரிக்கலாம். கொட்டையை முளைக்கப் போட்டால், பனங்கிழங்கு கிடைக்கும். இக் கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். நார்ச்சத்து மிகுந்த இந்த உணவில் மனிதனின் உள் வயிற்றுப் பகுதி பலமாகும்.குறிப்பாகத் தொப்பை விழாது.
பனம்பாலை கொப்பரையில் ஊற்றி கொதி நிலையில் கெட்டியாகும் பாகிலிருந்து கருப்பட்டி எனும் பனை வெல்லம் கிடைக்கும், அதையும் தாண்டிய கொதிநிலையில் கெட்டியாகும் பாகுவை மண் பானையில் போட்டு மண்ணுக்குள் மூடிவைத்து மூன்று மாதம் முதல் ஆறு மாதம் கழித்து எடுத்தால், கற்கண்டும், மொலாசஸ் திரவமும் இருக்கும். இதில் கற்கண்டை உணவாகவும், மொலாசசைப் பெட்ரோலுடன் குறிப்பிட்ட அளவில் கலந்து சுற்றுச் சூழலுக்கு பாதகமில்லாத வாகன எரிபொருளாகப் பயன்படுத்தலாம். மலேசிய அரசு இந்த முறையில் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கிறது.
மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும் போது தடுப்புக்கான பனை வாரைகள், வீடு மேயப் பனை ஓலைகள், அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெயிலில் கொஞ்சம் வாடவிட்டுப் பின்னர் உரித்தெடுக்கும் நார் கட்டுகள் கட்டவும், கால்நடைத் தீவனங்கள் கட்டி வைப்பதற்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப் போடவும் பயன்பட்டது.
நம் வீட்டுப் பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பற்ற வைக்க பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், வறண்டு போன ஓலைகளும் அவசியம் தேவைப்பட்டது. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நுங்குக் காய்களும் அடுப்பு எரிப்பதற்கான சிறந்த விறகாகப் பயன்பட்டன. ஆண் மரத்தின் பூக்காம்புகளில் இருக்கும் துகள்கள் மத்தாப்பு போல எரிந்து சிதறும் தன்மை கொண்டது. இதைக் கார்த்திகை தீபக் கொண்டாட்டத்தின்போது கிராமப்புற சிறுவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.
ஆணிவேர் இல்லாமல், 500-க்கும் அதிகமான பக்க வேர்களைக் கொண்டுள்ள பனைமரத்தின் வேர்கள், சாதாரனமாக நூறடி அகலத்தில் முப்பதடி ஆழம் வரை நிலத்தில் செல்லும். இதனால், மண் சரிவும், மண்அரிப்பும் தடுக்கப்படும். தடினமான வழுவழுப்பான வேரின் உள்ளே சோற்றுப்பகுதியும், அதனுள்ளே நரம்பு போன்ற நீர் கடத்தும் வேரும் உள்ளதால், நிலத்தில் விழும் மழை நீர் இந்த வேர்களின் வழியாக சில நிமிடங்களில் நூறடி ஆழம்வரை மண்ணுக்குள் சென்றுவிடும். இவ்வளவு வேகமாக மழை நீரை வேறு எந்த தொழில் நுட்பம் மூலமாகவும் நிலத்தடி நீராக மாற்ற முடியாது.
அதே நேரத்தில், நிலத்திலுள்ள தண்ணீரைத் தன்னுடைய இலைகளுக்கு உறிஞ்சாமல் வேரின் நடுப்பகுதியில் சேமித்து வைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டே எவ்வளவு வறண்ட காலங்களிலும் வாழும் தன்மையும் பனை மரத்துக்கு உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் ஏரி, குளம், வாய்க்கால், வயல்வெளி என எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் பனை மரங்களை நட்டு வளர்த்துள்ளார்கள்.
சமீபகாலத்தில் இரும்பு, நைலான், எரிவாயு போன்ற பொருட்களின் அளவுக்கு மீறிய பயன்பாட்டால் இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் தேவை இல்லாமல் போய்விட்டது. அதே நேரத்தில், ஆண்டுக்கு ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்துச் சுத்தம் செய்து சிரை எடுத்து விட்டால் தான் நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். அப்படி சிரை எடுக்கா விட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வரண்டு, காய்ந்து மரத்திலேயே தொங்குவதால், பாம்பு, அணில், எலிகள் குடியிருக்கத் தொடங்கி விடும். பின்னர் அவை அங்கிருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக கொண்டுபோய் விடும் என்பதால் விவசாயிகள் தங்கள் நிலத்திலுள்ள பனைமரத்தின் ஓலையை வெட்டிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்டச் சூழலில், இன்று பனைமரங்களை வளர்க்கும், விவசாயிகளுக்கு இம் மரத்தால் எவ்விதப் பயனுமில்லை. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மரத்தைச் சுத்தம் செய்ய நூறு ரூபாய் வரை செலவு செய்யவேண்டியுள்ளது. இப்படிச் செலவு செய்தாலுமமே கூட, ஐம்பது அறுபது வருடம் வளர்ந்த ஒரு பனைமரத்தை வியாபாரியிடம் விற்றால் இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரையில்தான் விலை போகிறது.
ஒவ்வொரு பனை மரத்துக்கும் விவசாயி செய்துள்ள செலவைக் கணக்கிட்டால் இந்த காசு எதற்கும் உதவாது. உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குத் தானியம் மிஞ்சாது என்பதைப் போல, பனை விளைவிக்கும் விவசாயி கணக்குப் பார்த்தால் பத்து பைசா கூட தேறாது. இதைக் கருத்தில் கொண்டுதான், கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள பனைமரங்களை பயனற்றதாகக் கருதி வெட்டி, செங்கல் சூளைக்கு அடுப்பெரிப்பதற்காக அனுப்பி வருகிறார்கள்.
1991-ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 40.25-கோடி பனைமரங்கள் இருந்தன. ஏரிகள், குளங்கள், ஓடைகள், ஆறு மற்றும் கால்வாய் ஓரங்களில் பனைமரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றைய நிலையில் தமிழகத்திலுள்ள பனைமரங்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாகக் குறைந்து விட்டது. அதனால்தான், தமிழகத்தின் நீர்வளமும் வெகுவாகக் குறைந்து விட்டது.
நகரங்களிலும், சாலை ஓரங்களிலும், காடுகளிலும் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களைச் செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் வைத்துள்ள கற்பக விருட்சமான இந்தப் பனைமரங்களை கட்டுப்படியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள். இந்த முரண்பாட்டின் காரணம் என்ன...? இயற்கை ஆர்வலரும், மரங்கள் பற்றிய ஆய்வாளரும், கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவருமான தமிழ்நாடு கள் இயக்கம் நல்லசாமி அவர்களிடம் கேட்டோம்.
“மரம் என்று இருந்தால், அதில் எதாவது பயன் இருக்கவேண்டும், பனை மரத்தால் இன்றைய காலகட்டத்தில் உழவர்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. அதனால், பனைமரங்களை வெட்டி விற்கிறார்கள். இதை எப்படித் தடுப்பது...? அந்த மரத்தில் எதாவது லாபம் கிடைக்க வழி வகை ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஒரே வழி... கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இதனால், பனைமரமும் வளரும், அதை வளர்க்கும் விவசாயிகளுக்கும் இலாபம் கிடைக்கும்.
பனைமரத்தில் இருந்து இறக்கப்படும் கள் எந்த விதமான இரசாயனக் கலப்பும் இல்லாதது. குடிக்கும் மனிதனின் குடலையும், வயிற்றையும் வேக வைக்காது. மிகக் குறைவான போதையை கொடுக்கும். சத்தான உணவு கள். இது போதைப் பொருள் அல்ல. அது ஒரு வகை உணவுப் பொருள்தான். அதை மது என்ற சொல்லுவதே தவறு. பனம்பால் என்று சொல்வதே சரி. பனம்பால் குடிப்பதால் உடலுக்குத் தீமை என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்குப் பத்து கோடி ரூபாய் பரிசளிக்கக் கள் இயக்கம் தயாராக உள்ளது. தமிழகத்தில் கள் இறக்கி விற்க வேண்டும் என்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல..., இங்கே இறக்கப்படும் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் இதை விடவும் கூடுதல் வருமானம் நம் நாட்டுக்குக் கிடைக்கும். இதனைச் செய்வதற்காவது அரசு முன்வர வேண்டும்.
இன்றைக்கு, இயற்கையான முறையில் உரம், யூரியா போடாத வயலில் விளைந்த நெல் என்றும் காய்கறி என்றும் சொன்னால் அதைத்தான் உலகிலுள்ள எல்லா நாட்டு மக்களும் ஓடிப்போய் வரிசையில் நின்று, காத்திருந்து வாங்குகிறார்கள். மக்களுக்கு இயற்கையின் மீது நம்பிக்கையும், செயற்கையின் மீது பயமும் வந்து விட்டது. இதற்கு காரணம் மனிதருக்கு வரும் புதிய புதிய நோய்கள்தான்.
இந்த நோய்க்குப் பயந்து இயற்கையின் பக்கம் போகும் மக்களுக்கு ஒன்று சொல்லுகிறேன், ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப் போனால் தண்ணீர் கூட கலக்காமல் இயற்கையில் தானாக விளையும் ஒரு காமதேனு பனை மரத்தில் உற்பத்தியாகும் பனம்பால் தான். அதை நம்முடைய மக்களைக் குடிக்க விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள், நம்மூர் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டுக் கொடுத்து நம் நாட்டிலேயே நம்முடைய மரத்தில் விளையும் பனம்பாலுக்கு தடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.
தவிர, இன்றைக்கு அரசுக்கு உள்ள ஒரு பெரும் பிரச்சனை, காடுகள், எரி, குளங்கள், ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களைப் பாதுகாப்பது முடியாத காரியமாக உள்ளது. அதைத் தீர்க்க ஒரேவழி எங்கெல்லாம் அரசின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யபடுகிறதோ அங்கெல்லாம் பனை மரங்களை நடவு செய்தால் போதும். பத்து தலைமுறைகளுக்கு இந்த மரங்கள் அந்த இடங்களையும், எதிர்கால மனித சமுதாயத்தையும் ஒருசேரப் பாதுகாக்கும்.
விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்தில், நாலு பக்கமும் 100-பனை மரங்களை நடலாம், ஒரு மரத்துக்கு சராசரியாக 175 லிட்டர் பனம்பால், அதன மூலம் 30 கிலோ கருப்பட்டி கிடைக்கும், இதற்கெனத் தனியாக தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. மற்ற மரங்களைப் போல நிழல் கட்டி விவசாயத்தையும் பாதிக்காது. அதனால், பனைமரங்களைப் பாதுகாக்கவும், புதிதாக நடவும் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, இளைய தலைமுறையினரும், அரசும் முன்வர வேண்டும்” என்கிறார்.
எதை இழந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள பனை மரங்களை நாம் காப்பாற்றியாக வேண்டும்.
ஏனெனில்,
பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்.