கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை தந்து, பெண்ணுக்கு எந்த தண்டனையையும் தராத இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்றக் கோரி ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக மத்திய அரசு, "கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக ஒருவர் புகார் தந்தால், அவரது மனைவியைத் தண்டிக்க முடியாது; மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டிக்க முடியும். அதே போல கள்ளக்காதலில் ஈடுபடுகிற கணவன் மீது மனைவி புகார் கொடுக்க இயலாத நிலை உள்ளது. எனவே, ஆண் - பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் இ.த.ச. 497 ஆவது பிரிவை நீக்க வேண்டும்" என்று பதிலை உச்சநீதிமன்றத்துக்குத் தந்தது.
மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இதுகுறித்து, "திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் பழகுவது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆணுக்கு மட்டும் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால் இதே குற்றத்தை செய்த பெண்ணுக்கு அப்படிப்பட்ட தண்டனையை வழங்கச் சட்டத்தில் இடம் இல்லை" என்றும் “கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்கள் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்படப்படாததால். அவர்களுக்குத் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரத்த நீதிபதிகள், இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்கு பதில், இதைவிட அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் நான்றாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கின் விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையினான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை விசாரித்து வழங்கிய தீர்ப்பில் கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்லர். ஆணுக்குப் பெண் சமமாக நடத்தப்பட வேண்டும். பெண்ணுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை. கள்ள உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் .497-ஆவது சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.