தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாசுக்கும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் இடையே சமீபகாலமாகக் கடும் வார்த்தைப் பிரயோகங்களும், சூடான விமர்சனப் பரிமாற்றங்களும் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் புதன்கிழமையன்று செய்தியாளர்களை அன்புமணி இராமதாஸ் சந்தித்தார். அப்போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 600முறை வெற்று அறிவிப்புகளை வெளியிட்டவர். அந்த அறிவிப்புகளில் ஏழு சதவீதத் திட்டங்களை மட்டுமே அவர் நிறைவேற்றியுள்ளார்” என்று கூறினார். பின்னர் சிப்காட் தொழிற்பேட்டை குறித்துப் பேசுகையில் “உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு உண்மையில் ஆண்மை இருந்தால், அவர் தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க வேண்டும்” என்று கடுமையான வார்த்தைகளால் சவால் விட்டும் இருந்தார்.
அன்புமணியின் இந்த சவாலுக்கு அன்பழகன் தக்கப் பதிலடியைத் தருவார் என்று அ.தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடியில் உள்ள அணைக்கட்டு இடதுபுற மற்றும் வலதுபுறக் கால்வாய்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பழகன், அன்புமணியின் கடந்த வார சவாலுக்கு கடுமையான வார்த்தைகளால் பதிலடி தந்தார்.
பேட்டியின்போது அமைச்சர் அன்பழகன், “அன்புமணியை ஆறறிவு கொண்ட மனிதனாகவே என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை ஐந்தறிவே கொண்ட ஒரு மனிதனாக பார்க்கிறேன். அன்புமணி, என்னைப் பாரத்து தர்மபுரியில் சிப்காட் கொண்டுவர ஆண்மை இருக்கிறதா? என கடந்த வாரம் கேட்டிருந்தார், சிப்காட் கொண்டு வருவதற்கும், ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்?
ஆண்மை எதற்குத் தேவைப்படும்? அந்த ஆண்மையின் காரணமாக ஒரு பெண், இரண்டு பையன்கள் என எனக்கு வாரிசுகள் இருக்கின்றனர். எனக்கு ஆண்மை இருக்கின்றது என்பது தெரியாமல் அன்புமணி பேசிக் கொண்டு இருக்கிறார். எதற்கு எதைத் தொடர்பு படுத்திப் பேசுவது என்பதே தெரியாமல் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். முன்பு மத்தியில் அமைச்சராக வேறு இருந்திருக்கிறார்.
அன்புமணியின் இந்தப் பேச்சினை வைத்தே அவருடைய தகுதியினை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஒருவரைத் தெரியாத்தனமாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
அவர், ஒரு மனிதன் ஒரு பொய்யினைத் தொடர்ந்து கூறி வந்தால் அந்தப் பொய் உண்மையாகிவிடக் கூடும் என்ற நினைப்பில் செயல்படுபவர். உண்மையில், அன்புமணியின் பா.ம.க.தான் தர்மபுரியில் சிப்காட்டைக் கொண்டுவரக் கூடாது என்பதற்காக ஆர்பாட்டம் நடத்தியக் கட்சி. நல்லம்பள்ளியிலே அந்த ஆர்பாட்டத்தை பா.ம.க. நடத்தியது. அதை இல்லை என்று அவரால் சொல்ல முடியுமா? அப்படி எல்லாம் செய்து விட்டு இன்று வந்து சிப்காட்டைக் கொண்டு வர ஆண்மை இருக்கிறதா என்று என்னைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்குப் பிறகு தர்மபுரி தொகுதி படிப்படியாகத் தேய்ந்து விட்டது. என்னைச் சீண்டினால் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் போவேன் என்றும் பேசி இருக்கிறார். அவர் எந்த எல்லைக்குப் போனாலும் அதனைச் சந்திக்க நானும் தயாராகவே இருக்கிறேன். பிழைக்க இங்கு வந்த அவரே எந்த லெவெலுக்கு வேண்டுமானாலும் போனால், நான் இதே ஊரில் பிறந்து, வளர்ந்த என்னால் அது முடியாதா என்ன?
பின்விளைவுகளை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பது போன்ற மிரட்டல்களை எல்லாம் என்னிடம் அவர் வைத்துக் கொள்ள வேண்டாம். இது பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. எப்படிப்பட்ட சூழலிலும் எதையும் சந்திக்கத் தயாரான நிலைமையில்தான் அம்மா எங்களை உருவாக்கி உள்ளார்” என்றார்.
இறுதியாக, “நேரடியான விவாதங்களை நடத்த நான் தயார். ஆனால், அதற்குத் தகுதியானவராக அன்புமணியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
டெயில் பீஸ்:
அரசு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பழகனுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் ஆரம்பத்தில் அமர்ந்திருந்தார். அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்கத் தொடங்கியதும் அங்கிருந்து அவசரமாக ஆட்சியர் வெளியேறிச் சென்று விட்டார்.