தர்மபுரி தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பாக வழக்குரைஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் ரூபாய் முப்பத்து நான்கு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக செயல்படத் தொடங்கியது. இந்தப் புதிய வளாகத்தில் கேண்டீன், சைக்கிள் நிறுத்துமிடம், தபால் நிலையம், வங்கி, ஜெராக்ஸ் உள்ளிட்ட எந்த வசதிகளும் இதுவரையில் கிடைக்கவில்லை.
இவை அனைத்துக்கும் நீதின்ற வளாகத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள நகரப் பகுதிக்கே வந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால் தாங்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட முதன்மை நீதிபதியிடத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் ஆட்சியர் கவனத்துக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்து சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.