தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் 6 வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிஐடியூ மாநிலத் தலைவர் சௌந்தரராஜன், சிஐடியூ பொருளாளர் மாலதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியூ மாநில தலைவர் சௌந்தரராஜன், 'மிக முக்கிய துறையான கூட்டுறவு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே உள்ளதாகவும், குறிப்பாகக் கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்றார்.
கூட்டுறவு பணியாளர்களை, பணி நிரந்திரம் செய்திட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
இதே போன்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள ஜனவரி மாதம் 8,9 ஆகிய தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கூட்டுறவு துறையில் தேர்தல் என்ற பெயரில் தமிழக அரசு ஜனநாயகத்திற்கு தவறு இழைத்து உள்ளதாகவும், கூட்டுறவுத்துறை படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் கூட்டுறவு துறையில் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்த அரசு, அதற்கான தொகையான 1700 கோடி ரூபாயை இது வரை துறைக்கு செலுத்தாமல் இருப்பதால், கூட்டுறவு துறை நலிவடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கூட்டுறவு துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனை அரசு தொடர்ந்து மறைத்து வருவதாகவும் புகார் தெரிவித்த அவர், நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதில் கூட முறைகேடு நடந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு, ஐந்து அல்லது பத்து பேருக்கு ஒரு அரசு பேருந்து என மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு பேருந்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மாவட்ட அளவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கும், தற்போது நடைபெறும் விழாவிற்கும் இதே போன்று அரசு பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், தமிழக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் காரணமாக அரசு போக்குவரத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார். தமிழக அரசைப் பொறுத்தவரை வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.