தமிழகத்தில் தடை செய்யபட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மாநிலம் முழுவதும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெயரளவிற்கு சில கடைகளில் ஆய்வு மேற்கொண்டு சொற்ப அளவிலான போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். என்றாலும் அவை முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையிலேயே உள்ளன.
தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் தடை செய்யபட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்து அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மாநில உணவு பாதுகாப்பு துறைக்கு இது குறித்துப் புகார் அளித்ததை தொடர்ந்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் மளிகை கடை, ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு சீல் வைத்து வைத்தனர். தடை செய்யப்பட்ட குட்கா போன்றவை சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சேலம் தாதாகப்பட்டி பகுதியில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி மாரியப்பன் தலைமையில் சம்மந்தப்பட்ட மளிகைக் கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது மளிகை கடையின் மேற்புறத்தில் ரகசிய அறை அமைத்து அதில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
இது போன்ற பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடத்தலைக் கட்டுபடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப் பட்டால் அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கபடும் என்றும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.