செயல்படாத புறக்காவல் நிலையத்தால் செயலிழந்த பேளூர்....

Tuesday 28, August 2018, 18:31:11

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் புறக்காவல் நிலையம் செயல்படாமல் மூடிக்கிடப்பதால், தினந்தோறும் வாகனங்கள் அதிகளவில் செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களிலும் வாரச்சந்தை  மற்றும் சுப முகூர்த்த தினங்களிலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்களும், பயணிகளும், வாகன ஓட்டுநர்களும், தவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 5வது கி.மீ., துாரத்தில், கருமந்துறை-–அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் பேளூர் பேரூராட்சி அமைந்துள்ளது. அருநுாற்றுமலை, சந்துமலை, நெய்யமலை, கல்ராயன்மலை கிராமங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக பேளூர் பேரூராட்சி விளங்குகிறது. 

அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லவும், விவசாய விளைப்பொருட்களை விற்பனை செய்யவும் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்பிற்காகவும், தினந்தோறும் பள்ளி, கல்லுாரி  மாணவ-–மாணவியர், பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும், பல்வேறு வகையான வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் பேளூருக்கு வந்த செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, வசிஷ்டநதிக்கரையில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க பஞ்ச பூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவில் பேளூரில் அமைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

சுப முகூர்த்த தினங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதால் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பேளூருக்கு வந்து செல்கின்றன. 
அதனால், தினந்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணிவரையும்,  வாரச்சந்தை கூடும் திங்கட்கிழமை  மற்றும் சுப முகூர்த்த தினங்களிலும் பேளூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பேளூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், அயோத்தியாப்பட்டணம் சாலையில், பேளூர் பேருந்து நிலையம் மற்றும் வாரச்சந்தை அமைந்துள்ள பகுதியில்,  இரு ஆண்டுக்கு முன் வாழப்பாடி காவல் நிலையத்தின் வாயிலாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

ஆனால், புறக்காவல் நிலையம் பெரும்பாலான நேரங்களிலும் மூடியேக் கிடப்பதால், பேளூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, சீரமைத்து ஒழுங்குபடுத்த போலீஸார் இல்லாததால், குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாமல் பொதுமக்களும், பயணிகளும், வாகன ஓட்டுநர்களும், மாணவ–மாணவியரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

பேளூர் புறக்காவல் நிலையத்திற்கு போலீஸாரை நியமித்து திறந்து வைக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பீக் ஹவர்ஸ் மற்றும் சுப முகூர்த்த தினங்கள், வாரச்சந்தை தினத்தன்று கூடுதல் போலீஸாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் வாழப்பாடி போலீஸார் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பேளூர் பகுதி நம்மிடம் பேளூர் பேரூராட்சி சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய மையமாக திகழ்வதாலும், வாரச்சந்தை மற்றும் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதாலும், திருமண மண்டபங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து அதிகரித்து வருகிறது. புறக்காவல் நிலையம் பெரும்பாலும் மூடிக்கிடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, போக்குவரத்தை சீரமைத்து ஒழுங்குபடுத்த போலீஸார் இருப்பதில்லை. எனவே, பேளூர் புறக்காவல் நிலையத்திற்கு போலீஸார் நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாழப்பாடி போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

 

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz