சுதந்திரதினச் சோகம்: சாக்கடைக் குழாய்க்குள் கண்டெடுக்கப்பட்ட ‘சுதந்திரம்!’

Thursday 16, August 2018, 14:22:04

‘இல்லை ஒரு பிள்ளை’ என்று ஏங்குவோர் பலர் இருக்க பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் சாக்கடைக்குள் வீசிச் செல்லும் கொடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகர் ஆறாவது தெருவில் வசிக்கும் பெண்மணியான கீதா தனது வீடு வாசலில் நின்றிருந்தபோது அருகிலிருந்த மழை நீர் கலப்பதற்காக அமைக்கப்பட்ட சாக்கடையில் இருந்து குழந்தையின் அழுகுரலைப் போன்ற சத்தம் கேட்டிருக்கிறது.

இதனால் திடுக்கிட்ட கீதா சாக்கடையினை எட்டிப் பார்த்திருக்கிறார். அங்கு எதுவும் தென்படவில்லை. கீழே அமர்ந்து குனிந்து சாக்கடைக் குழாய்க்குள் பார்த்தபோது அதனுள்ளே ஏதோ ஒன்று அடைபட்டிருப்பதையும், அதில் அசைவிருப்பதையும் கண்டிருக்கிறார். சத்தமும் அங்கிருந்துதான் வந்து கொண்டிருந்திருக்கிறது.

தனது கையினை சாக்கடைக் குழாய்க்குள் நுழைத்து அடைத்துக் கொண்டிருந்ததை மெல்ல வெளியே இழுத்துப் போட்டபோது அது பொம்மை போன்று அழகிய தோற்றமுடைய உயிருள்ள ஆண்குழந்தை என்று தெரிய வர கீதாவும் அங்கு அதனை வேடிக்கைப் பார்த்தவாறு நின்றிர்ந்த மற்றவர்களும் அதிர்ந்து போயுள்ளனர்.

தொப்புள்கொடி கூட முழுமையாக அறுத்திடாத நிலையில் கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் வீறிட்டுக் கொண்டிருந்த அந்தக் குழந்தை பிறந்து இரண்டு மணி நேரம் கூட ஆகி இருக்காது.

பிறந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் அந்தக் குழந்தை  மழைநீர் வெளியறிச் செல்ல அமைக்கப்பட்டிருந்த சாக்கடைக் குழாய்க்குள் திணிக்கப்பட்டிருந்திருக்கிறது.

நல்ல வேளையாகப் பெருமழை எதுவும் அந்த நேரத்தில் இல்லாத காரணத்தால் நீர்ப் பெருக்கு எதுவும் இல்லை. அதனால், குழந்தையும் சாக்கடைக்குள் அடித்துச் செல்லாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. உடனடியாகக் குழந்தையினைக் குளிக்க வைத்து சுத்தம் செய்த கீதா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கு குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.

குழந்தையை கீதா காப்பாற்றிய காட்சியை ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற வைரலாக அது பரவியது. இதனையடுத்து கீதாவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. இதனை அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கீதாவினை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

   

சாக்கடைக் குழாக்குள் அந்த குழந்தையை கண்ட விதம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாகவும், ஒரு தாயாக அதனைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் கீதா கூறியுள்ளார்.ஹேட்ஸ் ஆப் யூ கீதா!

சுதந்திரத் திருநாளன்று சாக்கடைக் குழாய்க்குள் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்குச் ‘சுதந்திரம்’ என்று பெயர் சூட்டபட்டுள்ளது...

வறுமையின் கொடுமையோ.... உரிய அடையாளமின்றி பிறந்த தவறோ.... காரணம் எதுவாயினும் இது போன்றவை மன்னிக்கவே முடியாத குற்றங்கள்!

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz