சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக சிலை கடத்தல் தடுப்பு குறித்த எந்தவிதமான அறிக்கையினையும் அரசுக்குத் தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக, பொன் மாணிக்கவேல் விசாரணை மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினைக் கலைத்து விட்டு, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற கொள்கை முடிவினை எடுத்துள்ளதாக தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது!
ஏற்கனவே, சிலைக் கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தமிழக போலீஸ் செயல்பாடு திருப்தியாக இல்லை என்ற காரணத்தினால்தான் புதியதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினை டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் தமிழக அரசு நிறுவியது.
பல்வேறு கோவில்களில் காணாமற் போயிருந்த பல சிலைகளைத் தனது விசாரணையில் கண்டுபிடித்து அவற்றை மீட்டு வந்த டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடத்தலில் தொடர்புடைய பல முக்கிய வி.ஐ.பி.களை அதிரடியாகக் கைது செய்தார். அதிர வைக்கும்படியான இந்தக் கைதுகள் தமிழக மக்களின் பாராட்டையும் வரவேற்பினையும் பெற்றன.
இந்த நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரடியாக மாற்றப்பட்டார். தற்போது அந்தப் பிரிவும் கலைக்கப்பட்டு விட்டது. இது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.