குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். விரைவில் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் போட்டியிடத் தடை விதிக்கக் கோரி டெல்லி பா.ஜனதா தலைவர் அஸ்வினி உபாத்யாயா, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜே.எம்.லிங்டோ மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.
கடந்த மாதம் 28-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் நேற்று 100 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நீதிபதிகள், “கடும் குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்பதற்கு தடை எதுவும் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரே காரணத்துக்காக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதற்குரிய நிலையில் நாங்கள் இல்லை. இது தொடர்பான சட்ட வரையறைக்குள் எங்களால் செல்ல இயலாது” என்று தீர்ப்பு வழங்கினர்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக என்.என்.வோரா குழு தாக்கல் செய்த அறிக்கையை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், “அப்போதே அரசியலில் குற்றமும் கலந்துவிட்டதை பலமாக உணர முடிந்தது. எனவே அரசியலில் குற்றம் என்பது பயங்கரவாத செயலுக்கு ஒப்பானதாகும்” எனவும் குறிப்பிட்டனர்.