கர்நாடகா மாநிலம் கூர்க் மலைப்பகுதியில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரிநதி கர்நாடகா மாநிலத்தை வளமாக்கி, அணைகளை நிறைத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் பாய்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் காவிரி நதிநீர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களுக்கு வாய்க்கால் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இந்த மாவட்டத்தில் அணை பாசன வசதி பெறும் விளைநிலங்களில் பரப்பளவு டெல்டா மாவட்டங்களை விட மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே போல கர்நாடகா மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி நதி பாய்ந்து வந்தும் தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரிநதி நீர் பாசனத்திற்கு பயன்படுவதில்லை. இதனால் காவரி நதி கடந்து செல்லும் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான விளைநிலங்கள் பருவ மழையை நம்பி பயிரிடும் மானாவாரி நிலங்களாகவே காணப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு மற்றும் கொல்லிமலைப்பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் சுவேதாநதியும், எப்போதாவது ஒருமுறை மட்டுமே நீரோட்டத்தை பெறுகின்றன. ஆண்டு தோறும் பெரும்பாலான மாதங்களில் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. பருவ மழையும் குறைந்து போனதால் ஆறு,குளம்,குட்டை, நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகளும் காய்ந்து கிடக்கின்றன.
சேலம் – தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் எல்லையாக அமைந்துள்ள அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்னைக்கு செல்லும் வீராணம் ஏரியை சென்றடைகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வசிஷ்நதி உற்பத்தியாகும் அருநுாற்றுமலை பெரியக்குட்டி மடுவு வனப்பகுதிக்கும், காவரியாறு தமிழகத்தை வந்தடையும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கும் இடைப்பட்ட துாரம் 100 கி.மீ., மட்டும்தான். அதுமட்டுமின்றி, ஒகேனக்கலில் இருந்து தாழ்வான பகுதியில் தான் பெரியகுட்டிமடுவு அமைந்துள்ளது.எனவே, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து, மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக திறக்கப்படும் நேரத்தில், காவிரிநதி நீரை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதியில் திறந்து விட வேண்டுமென்பது, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வசிஷ்நதி கரையோர கிராம விவசாயிகளிடையே நீண்டநாளாக கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து காவிரி நதிநீரை வசிஷ்டநதியில் திறப்பதின் வாயிலாக, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பருவ மழையை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், காவிரி நதிநீரை பெற்று செழிப்படையும். இந்தத் திட்டம் குறித்து 15 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு நடத்திய சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பேளூர் கரடிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீலகராஜன், அந்த திட்டத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு மற்றும் பயன்பெறும் பகுதிகள் குறித்து தமிழக அரசின் சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லையெனக் கூறி அப்போதைய தமிழக அரசு நிராகரித்து விட்டது.
மேட்டூர் அணை நிரம்பும்போது திறக்கப்படும் காவிரி உபரிநீர் சேமிக்கப்படாமல் வீணே கடலில் கந்து வருவது குறித்து அனைத்துத் தரப்பினருமே கவலை தெரிவித்து வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் காவிரி உபரிநீரை வசிஷ்டநதியில் திருப்பிவிடுவது விவசாய நலனுக்கு உகந்ததாக இருக்கும்; எனவே அதற்கு ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டுமென சேலம், விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆகியோருக்கு சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: இப் பகுதியில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி திட்டக்குடி வரை சென்று கடலில் கலக்கிறது. போதியமழையில்லாததால் நீர்வரத்தின்றி வசிஷ்டநதியில் வறண்டு கிடக்கிறது. அதனால் விவசாயத்திற்கு வழியின்றி மூன்று மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரை, வாய்க்கால் அமைத்தோ அல்லது குழாய்கள் பதித்தோ வசிஷ்டநதிக்கு திருப்பிவிடுவதற்கு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், விழுப்புரம் மற்றும் கடலுார் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பயன் பெறுவார்கள். கல்வராயன் மலை கைக்கான் வளவு பகுதியில் இருந்து வாய்க்கால் அமைத்து, கரியகோவில் அணைக்கு கூடுதல் நீர்வரத்து வழிவகை செய்யும் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில்குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பி வழிந்து காவிரியாற்றில் திறந்து விடப்படும் உபநீரின் ஒருபகுதியை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதியில் திருப்பிவிடும் திட்டத்திற்கு, மத்திய மாநில அரசுகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டுமென, சேலம், தர்மபுரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் கிழக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி வாழப்பாடி ஜவஹர், ஏத்தாப்பூர் முன்னோடி விவசாயி கொட்டவாடி குப்புசாமி ஆகியோர் நம்மிடம், "சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்திருந்தும் சேலம் கிழக்கு மாவட்ட த்தில் ஆறு, குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. வறட்சியால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போவதால் பயிர்செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்தோ அல்லது குழாய்கள் அமைத்தோ காவிரி நதிநீரை கொண்டு வந்து வசிஷ்டநதியில் விடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், சேலம் கிழக்கு மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களிலும் வேளாண்மைத் தொழில் செழிப்படைந்து விவசாயிகள் வாழ்வு பெறுவார்கள். எனவே இத்திட்டத்தை ஆய்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்" என்றனர்.