ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த வாலிபர் வாசுதேவன் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கும், இதே நிறுவனத்தில் பணியாற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் காலை சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு இன்பச் சுற்றுலா வந்துள்ளனர்.
ஏற்காட்டை சுற்றிப் பார்த்த பின்னர் அவர்கள் இருவரும் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அங்கு, வாசுதேவன் மது அருந்தியுள்ளார். அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக கோபித்துக் கொண்ட அந்தப் பெண் தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு அண்ணா பூங்கா பகுதிக்கு வந்துள்ளார். அவரைப் பின்தொடரந்து வந்த வாசுதேவன் தன்னுடன் வந்து விடுமாறு தனது காதலியை அழைக்க அதற்கு அவர் மறுக்க இருவருக்குமிடையே சாலையிலேயே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் அமர்ந்தபடி இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஏற்காடு ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரான நாச்சான் (எ) விஜியக்குமார், கார் டிரைவரான குமார் (எ) ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரும் அந்தப் பெண்ணிடத்தில் என்ன தகராறு என விசாரித்தபடி அவரைத் தங்களது ஆட்டோவில் இழுத்து அமர வைத்துள்ளனர். இதனைக் கண்ட வாசுதேவன் அவர்களிடம் இருந்து தனது காதலியை மீட்க முயற்சித்துள்ளார்.
ஆனால், அவர்கள் இருவரூம் சேர்ந்து வாசுதேவனை அடித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு அவரை விரட்டி உள்ளனர். பின்னர் நாச்சான் மற்றும் குமார் ஆகிய இருவரும் வாசுதேவனின் அந்தப் பெண்ணை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி, அழைத்து சென்றுள்ளனர், செல்லும் வழியிலேயே குமார் இறங்கிவிட, நாச்சான், அந்தப் பெண்ணைத் தனக்கு தெரிந்த ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டிக் கற்பழித்துள்ளான். பின்னர், நேற்று அதிகாலை 1.45 க்கு அந்த பெண்ணை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு மீண்டும் ஏற்காடு திரும்பி வந்துள்ளான்.
பின்னர் நேற்று காலை வாசுதேவன் ஏற்காடு காவல் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் ஜாகீராவிடம் புகார் அளித்தனர். ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர் ஒண்டிக்கடை பகுதியில் இருந்த நாச்சான் மற்றும், குமார் ஆகியோரை பிடித்து விசாரனை மேற்கொண்டார். நேற்று மாலை, சேலம் ரூரல் துணை காவல் கண்காணிப்பாளர் சூர்ய நாரயணன் ஏற்காடு காவல் நிலையம் வந்து அவர்களிடம் விசாரனை மேற்கொண்டார். பின்னர், போலீசார் நாச்சான் மீது கற்பழிப்பு மற்றும் வழிப்பறி வழக்கும், குமார் மீது வழிப்பறி வழக்கும் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
கைது செய்யபட்டு உள்ள இந்த இருவரும் ஏற்கனவே இது போன்று ஏற்காட்டிற்கு காதலனுடன் வரும் இளம்பெண்களை மிரட்டிக் கடத்தி பாலியல் தொல்லை தந்ததாகவும் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. வீட்டுக்குத் தெரியாமல் வந்த இடத்தில் தங்களுக்கு நடந்த அசம்பாவிதம் வீட்டுக்குத் தெரிந்தால் பெரும் சிக்கலாகி விடும் என பயந்து காதலர்கள் யாரும் இது நாள் வரையில் போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை. அதைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நாச்சான், குமார் ஆகிய இருவரும் நிறைய பேரின் வாழ்க்கையில் புகுந்து விளையாடியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் போலீஸ் காவலில் அவர்களை எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளிப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.