தமிழக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் - சபாநாயகர் தனபாலுக்கு இடையேயான மோதல் குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி.இலட்சுமணன் நேற்று நியூஸ் 7 செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பல முக்கியமான பல கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகள் சொல்வதென்ன என்பது குறித்தும் விரிவாக அலசியிருந்தார்.
மூத்தப் பத்திரிகையாளர் எஸ்.பி.இலட்சுமணன் தன்னுடைய பேட்டியில் கூறியிருப்பதாவது....
"காமெடி நடிகரான கருணாஸ் நேற்றுப் பிற்பகலில் இருந்து ஆளுங்கட்சியினரை கதிகலங்க வைத்துக் கொண்டுள்ளார் என்றுதான் நான் சொல்லுவேன். எல்லோரும் சொல்வதைப் போல இதனை ஒரு வரியில் வெறும் நோட்டீசை அனுப்பி விட்டார் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் பிரிவு 179 ஒரு சபாநாயகரை எப்படியெல்லாம் பதவி நீக்கம் செய்யலாம் என்று விவரிக்கிறது.
அந்தப் பிரிவின் மூன்றாவது ஷரத்து என்ன சொல்கிறது என்றால், எம்.எல்.ஏ.வாக இருக்கிற ஒருவர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தும் சபாநாயகரை நீக்கலாம் என்று சொல்கிறது. அதற்கான சில விதிமுறைகள் பின்னால் சொல்லப்படுகிறது. அந்த அரசியலமைப்புச் சட்டத்தினை மையமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றமும் தங்களுக்கான சட்டமன்ற விதிமுறையினைத் தொகுத்துள்ளது. அரசியமைப்புச் சட்டத்தை மீறாமல் அதற்குட்பட்டு தமிழ்நாடு சட்டமன்றமும் தங்களுக்கான விதிமுறைகளைத் தொகுத்துள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகளின்படி, பிரிவு 68 என்ன சொல்லுகிறதென்றால் சபாநாயகர் மீது ஒரு எம்.எல்.ஏ.வுக்கு நம்பிக்கை இல்லை என்னும்போது, தனிநபராக யாரையும் கலந்தாலோசிக்காமல் எதனால் எனக்கு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லையென்று ஒரு தீர்மானம் எழுதி - அதாவது நீங்கள் சபையை நடத்துகிற விதம் சரியில்லை; கட்சி வித்தியாசத்துடன் பாகுபாடு காட்டுகிறீர்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அதில் எழுதி அதனைச் சட்டமன்றச் செயலாளரிடம் தர வேண்டுமென்றும், அதன் பிரதியை சபாநாகருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அந்த விதி கூறுகிறது.
அதே போல, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகளின்படி, பிரிவு 69 என்ன சொல்லுகிறதென்றால் அப்படிக் கொடுக்கப்பட்ட நோட்டீசுக்கு அந்த நிமிடத்தில் இருந்து 14 நாட்களில் அந்த மனுவினை சட்டமன்றச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும். 14 நாட்கள் முடிந்த பின்னர் சட்டமன்றம் எப்போது கூடுகின்றதோ, அந்த முதல் நாளிலேயே அது அலுவலாகச் சேர்க்கப்பட வேண்டும் என்கிறது. கேள்வி நேரம் முடிந்த பிறகு, இந்த நோட்டீஸ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
விவாதத்துக்கு அதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதிகளின் 70ஆவது பிரிவு சொல்லுகிறது. அன்றைய தினம் சபாநாயகர் தன்னுடைய இருக்கையில் அமரக் கூடாது. அவருக்குப் பதிலாகச் சபையில் ஒப்புதலோடு யாராவது ஒருவர், (அது துணைசபாநாயகர் என்று எந்த இடத்திலும் குறிக்கப்படவில்லை) சபையினை நடத்த வேண்டும்.
14 நாட்கள் இந்த நோட்டீசுக்கான அவகாசமாகத் தரப்பட்டதா என்பது முதலில் சரிபார்க்கப்படும். அதன்பிறகு, என்ன நடக்கும் என்றால்.... இந்த விவகாரத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோமே.... உறுப்பினர் கருணாஸ் இப்படி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தந்துள்ளார். அதனை யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள் என்று அவையில் கேட்கப்படும். பிரிவு 70 என்ன சொல்லுகிறது என்றால் குறைந்தது 35 உறுப்பினர்களின் ஆதரவு இந்தத் தீர்மானத்துக்கு இருக்க வேண்டும்.
அந்த ஆதரவுக்காக ஓட்டெடுப்பெல்லாம் நடக்காது. ஆதரிப்பவர்கள் எழுந்து நின்றாலே போதும். 35 உறுப்பினர்கள் எழுந்து நின்று இந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்லிவிட்டாலே போதும் அன்றைய தினமே அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்தலாம். இதனை தாங்கள் நினைத்தமாதிரி எல்லாம் ஆளுங்கட்சி இழுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஏழு நாட்களுக்குள்ளாக வாக்கெடுப்பினை நடத்தியாக வேண்டும் என்பதுதான் விதிமுறை.
இப்படிப்பட்ட ஒரு 'செக்'கினை கருணாஸ் வைத்து விட்டதால்தான், அவர் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸ் மிகப் பெரிய அளவில் பூதாகரமாக எழுந்து நின்று ஆளுங்கட்சியினை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. இப்படி ஒரு நோட்டீசை கருணாஸ் அனுப்பியதால் அவரை யாரோ பின்னின்று இயக்குவதாகப் பலரும் கூறுகின்றனர்.
ஊன்றிக் கவனித்தால் இப்படி ஒரு நோட்டீசைக் கருணாஸ் அனுப்பிடக் காரணமே சபாநாகர் தனபால்தான் என்பது தெளிவாக விளங்கும். ஏனென்றால் முதலமைச்சருக்கு எதிராகக் கருணாஸ் பேசிவிட்டார் என்ற காரணத்தை வெளியில் சொல்லாமல், அவர்களுக்குள்ளாகவே ஆய்வு நடத்தி, கருணாஸ் மற்றும் தற்போது தினகரண் பின்னால் நிற்கிற அந்த மூன்று எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்ப விவாதித்து முடிவெடுத்ததன் விளைவாகவே கருணாஸ் இப்படி ஒரு நிலைப்பாட்டினை எடுத்தார்.
இந்த நிகழ்வுக்கு முன்பு வரையில் யாரும், யாரையும் சீண்டவில்லை, எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் சபாநாயகரது உரிமையில் உயர்நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி சொல்லிவிட்டார்.
அதே நேரத்தில் சபாநாயகரின் சில நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. 18 எம்.எல்.ஏ.க்கள் செய்தது கட்சி விரோத நடவடிக்கை அல்ல; அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல என்று இன்னொரு நீதிபதியும் சொல்லியிருக்கிறபோது அதே போன்ற இன்னொரு பிரச்னையை சபாநாயகர் தொட நினைத்ததே ஒரு தவறான முன்னுதாரணம்தான். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிற செயல். எந்த வகையிலும் ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பாற்றாது.
அப்படி சபாநாயகர் செய்யத் துணிந்த பிறகுதான், சபாநாயகர் தனபாலைப் பிடிக்காதவர்களோ அல்லது இந்த ஆட்சியையே பிடிக்காதவர்களோ அல்லது ஒரு நல்ல ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணமுடையவர்களோ தந்த ஒரு நல்ல ஆலோசனையின் அடிப்படையில் கருணாஸ் இந்த முடிவினை எடுத்துள்ளார். அரசியல் ரீதியாகச் சொல்ல வேண்டுமானால் அது ஸ்டாலினாகவோ, தினகரனாகவோ இருந்தால் தவறேயில்லை.
நேற்று காலையில் பத்தே முக்கால் மணிக்கு இந்த நோட்டீஸ் சர்வ் ஆனது. அதனை சட்டமன்றச் செயலாளர் வாங்க மறுத்ததாக ஒரு தகவல். மறுத்தாலும் இது கொடுக்கப்பட்டே ஆக வேண்டும். அதனைக் கொண்டு சென்றவர்கள் அதனைத் தந்து அதற்கான அக்னாலெட்ஜ்மெண்ட்டினையும் வாங்கி விட்டனர்.
"அரசியல் அமைப்புச் சட்டப்படி நேற்று காலை 10.45 மணியில் இருந்து சபாநாயகர் தன்னுடைய பதவியில் இல்லை என்றுதான் அர்த்தம்" என்று முத்தாய்ப்பாகக் கூறித் தன்னுடைய பேட்டியினை நிறைவு செய்தார் எஸ்.பி.இலட்சுமணன்.