வன்னியர் சமூகத்துப் பெருந்தலைவர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார். சுதந்திரப் போராட்ட வீரரான இவர் விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்தவர். வன்னியருக்கான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தொடங்கி நடத்தியவர். எஸ்எஸ்ஆர் என்று வன்னிய மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். தமிழக அரசில் உள்ளாட்சித்துறை அமைச்சர பொறுப்பினை வகித்தவர். எம்.பி.யாகவும் பணியாற்றியவர்.
1952ல் நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் வெற்றிப்பெற்று சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர், எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.
1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய எஸ்எஸ்ஆர் மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தனர்.
1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க எஸ்எஸ்ஆர் முயற்சி செய்தார். ஆனால், திமுக தன் கூட்டணியில் எஸ்எஸ்ஆரின் கட்சிக்கு இடம் தர மறுத்து விட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் தனது கட்சியை மீண்டும் கலைத்து விட்ட எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார், இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து விட்டார்.
1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வன்னிய மக்களின் பாசத்துக்குரிய எஸ்எஸ்ஆர் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 3ல் மரணமடைந்தார். தற்போதைய விழுப்புரம் மாவட்டம் இதற்கு முன்பு, இவரது பெயரால் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியது.
சுதந்திரபோராட்ட வீரர் இராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளையும் அரசு விழாவாகக் கொண்டாட இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி முன்பே அறிவித்திருந்தார். 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ல் பிறந்த எஸ்எஸ்ஆரின் நூற்றாண்டாக இந்த ஆண்டு மலருகிறது.
எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் நூற்றாண்டையொட்டி கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் அமைக்கப்படவுள்ள அவரது மணிமண்டபத்திற்கு இம் மாதம் 14-ம் தேதி வியாழக்கிழமை சென்னை கோட்டையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார், கடலூரில் நடக்கவுள்ள விழா நிகழ்சிகளில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், ஆகியோர்களுடன் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.