சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மணல் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு, மணல் தட்டுபாடு குறித்தும், தரமில்லாத எம்- சேண்ட் மணலை தமிழக அரசு ஊக்குவிப்பது குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணையன், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தமிழக ஆற்று பகுதியில் தேவையான மணல் இருப்பதாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான மணல் உள்ள நிலையில், அரசு செயற்கையாக மணல் தட்டுபாட்டை உருவாக்கி வருவதாகவும், நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லோடுகள் தேவைப்படும் நிலையில் குறைந்த அளவு மணல் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், இது ஆன் – லைனில் புக்கிங் செய்வதில் ஏற்பட்டு வரும் குளறுபடி என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் மணல் உள்ள நிலையில் அரசானது, தரமில்லாத எம்- சேண்ட் மணலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும், இதே போன்று கடந்த காலங்களில் மலேசியா மணலில் சிலிக்கான் இருப்பதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு தற்போது மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பது சந்தேகம் அளிப்பதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
தமிழக முதல்வரின் நெருக்கமான உறவினர்களின் நலனுக்காகவும், ஒரு சில பெரும் முதலாளிகளின் நலனுக்காகவும், தமிழக அரசு எம்- சேண்ட் மணலையும், மலேசியா மணலையும், ஊக்குவிப்பதாக தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டாலும், கூடுதலான விலையாலும் கட்டுமான தொழில் மிகவும் நலிவடைந்து வருவதாகவும் இதனால் சுமார் 25 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் அகதிகளாக மற்ற மாநிலங்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் வருத்ததோடு தெரிவித்தார்.
மேலும், தரமில்லாத எம்- சேண்ட் மணலுக்குத் தடை விதிக்க வேண்டும், மலேசியா மணலை இறக்குமதி செய்வதை ரத்து செய்திட வேண்டும், ஆன் – லைன் விற்பனையை ரத்து செய்து விட்டு, முதல்வர் அறிவித்தபடி 70 மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை குறித்து 15 நாட்களுக்குள் அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், தங்களது மணல் லாரிகளை நிறுத்தியும், தங்களது பர்மிட், லைசன்ஸ் ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிகை விடுத்தார்.