“தமிழக மக்களுக்காக செய்த பணிகள் என்னவென்று விவாதிக்கத் தயாரா?”
- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.
சேலத்தில் அரசு நிகழ்ச்சியொன்றில் பேசி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அன்புமணி இராமதாஸ் தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்று வினா எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக நீண்ட அறிக்கை ஒன்றினை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
‘பூனைக் கண்களை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்குமாம். அதேபோல் தான் மணல் கொள்ளை வருமானம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் ஆகியவை குறித்தே கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தமிழக மக்களுக்காக நான் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நடப்புகளை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்தாலாவது அவருக்கு எனது சாதனைகள் தெரிந்திருக்கும்.
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை 2005-ஆம் ஆண்டில் நான் தான் தொடங்கினேன். இந்தத் திட்டத்தின்படி நான் பதவி வகித்த 5 ஆண்டுகளிலும், அதற்கு பின்வந்த 9 ஆண்டுகளிலும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் சுமார் ரூ.25,000 கோடி ஆகும்.
இந்திய விடுதலைக்குப் பிறகு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு, அனைத்துத் தரப்பினர் வரவேற்பையும் பெற்றத் திட்டம் என்றால் அது என்னால் கொண்டு வரப்பட்ட 108 அவசர ஊர்தித் திட்டம் தான். தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 25,000 குழந்தைகள் அவசர ஊர்தியில் பிறந்துள்ளன.இந்த உண்மைகள் எல்லாம் பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லை என்றால், அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்.
சேலத்தில் 139 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் சிறப்பு மருத்துவமனை நான் கொண்டு வந்த திட்டம் தான். அதற்கான நிதியை நான் தான் ஒதுக்கினேன். முதலமைச்சரான பின்னர் பல முறை அந்த மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த எடப்பாடி, அம்மருத்துவமனையைக் கட்டியது யார்? என்ற வரலாற்றைக் கேட்டுத் தெரிந்திருக்க வேண்டாமா?
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், அதற்காக ரூ.150 கோடி நிதியும் ஒதுக்கினேன். ஆனால், ஜெயலலிதா அரசு அதற்கான நிதியை வேறு திட்டங்களுக்கு செலவழித்து விட்டது.
மக்களுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தும் குட்காவை தடை செய்தது நான். ஆனால், தடை செய்யப்பட்ட குட்காவை விருப்பம் போல விற்பனை செய்து கொள்ள அனுமதித்து, கோடிக் கணக்கில் ஊழல் செய்து குவித்து வைத்திருப்பது பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் படைத்த சாதனைகள் இத்துடன் முடிந்து விட வில்லை. இதோ எனது சாதனைப் பட்டியல்....
* சென்னையில் ரூ.100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதி உயர் சிறப்பு மையம்.
* சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம்.
* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருந்து ஆய்வகம்.
* சென்னையில் 112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
* சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம்.
* தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கு உதவி.
* தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி./ எய்ட்சை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டங்கள்.
* செங்கல்பட்டில் ரூ. 1,000 கோடியில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா.
* காஞ்சிபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்று நோய் மையம்.
* வேலூர் வாலாஜா, சேலம் ஓமலூர், மதுரை மேலூர், கடலூர், தாம்பரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விபத்துக்காய சிகிச்சை மையங்கள்.
ஆட்சிக்கு வராமலேயே பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்திற்கு செய்த பணிகள் அளப்பரியது ஆகும். அவற்றை முழுமையாக பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்பது தான் உண்மை.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்காக நான் செய்த பணிகள் என்ன? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்த பணிகள் என்ன? என்பது குறித்தும் முதல்வருடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். முதலமைச்சர் குறிப்பிடும் நாளில், குறிப்பிடும் இடத்தில் விவாதத்தை நடத்திக் கொள்ளலாம். இதற்கு தயாரா? என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும்’
என்று தனது அறிக்கையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.