அதிமுக அமைச்சர்கள் ஊழல் நாயகர்கள் – சேலத்தில் ஸ்டாலின் பேச்சு!

Tuesday 18, September 2018, 18:25:20

அ.தி.மு.க அரசின் ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இன்று நடந்த இந்த ஆர்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.எம்.செல்வகணபதி, ஜெகத்ரட்சகன், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்தஆர்பாட்டத்தில் அதிமுக அரசின் ஊழல்களை சுட்டிக்காட்டி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசும்போது, திமுக தலைவரானபின் நடைபெறும் முதல் ஆர்பாட்டம் சேலத்தில் நடக்கும் இந்த ஆர்பாட்டம் என்றும், அதற்காக சேலம் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து வந்துள்ளதாவும் இன்று தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் தமிழகத்தில் அதிமுக ஒழியும்வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்டாலின் பேசும்போது, “சேலத்தில் உள்ள கோட்டை பகுதியில்தான் மறைந்த திமுக தலைவர் கலைஞர் குடியிருந்து வந்தார். இங்குள்ள மாடர்ன் தியேட்டருக்காகப் பல திரைப்படங்களுக்குக் கதை-வசனம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுச் சொன்னால் மந்திரி குமாரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான கொள்ளைக்கார பர்த்தீபனாகவே சேலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி எனக்குத் தோன்றுகிறது.

ஒட்டு மொத்த தமிழக மக்களே இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். சேலம் மாம்பழத்தில் வண்டு துளைத்தது போல எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலை துளைத்துள்ள வண்டு. அ.தி.மு.க. என்கிற கொள்ளையனிடம் இருந்து இந்த தமிழ்நாட்டை மீட்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தி.மு.க.வுக்கு உண்டு.

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி உள்பட 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அகில இந்திய அளவில் ஊழல் கறை படிந்த அமைச்சரவையாக உள்ளது. அ.தி.மு.க.வின் ஊழல் குறித்து விசாரணை நடத்த தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க சென்றால் அந்த துறையின் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். தலைமைக் காவல்துறை அதிகாரியைச் சந்திக்க சென்றால் டிஜிபி ராஜேந்திரன் குட்கா ஊழலில் சிக்கியுள்ளார்.

அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சரிடம் சென்றால் அவர் காண்டிராக்ட் ஊழலில் சிக்கியுள்ளார். ஊழல் ஆட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பருப்பு கொள்முதலில் 400 கோடி ரூபாய் ஊழலில் அமைச்சர் காமராஜ் சிக்கியுள்ளார். 200 கோடி ரூபாய் அண்ணா பழல்கலைக்கழக மதிப்பெண் ஊழலில் கே.பி. அன்பழகன் சிக்கியுள்ளார்.

2ஆயிரம் ஆம்னி பேருந்து வாங்கியதில் 300 கோடி ரூபாய் ஊழலில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விரைவில் சிக்க உள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் முட்டை டெண்டர் ஊழல், 84 கோடி ரூபாய் காவல்துறைக்கு வாக்கிடாக்கி வாக்கியதில் கொள்ளை, மீனவர்களுக்கு வழங்கும் வாக்கிடாக்கி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ஊழலின் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமி என்றால், அவரது கூட்டாளிகளாக அனைத்து அமைச்சர்களும் உள்ளனர்.

சிறந்த ஊழல் நாயகர்கள் என்று தொலைக்காட்சி போட்டி நடத்தினால், அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அந்த போட்டியில் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போடும் நிலையில் உள்ளது. நான் கருணாநிதியின் மகன் ஆதராத்துடன்தான் பேசுவேன். நான் பேசுவதில் தவறு என்று கருதினால் என்மீது வழக்குத் தொடுக்கட்டும், ஆனால், அவர்கள் வழக்கு போடும் நிலையில் இல்லை. காரணம் அவர்களே ஊழலில் சிக்கியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் ஊழல் என்ன என்று கேட்டால், ஜூலை 16, 17 தேதியில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடந்தது. இதில் செய்யாதுரை, நாகராஜன் வீடுகளில் சோதனை நடந்தது. இதில் 180 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக கைபற்றப்பட்டது. செய்யாதுரை மற்றும் நாகராஜன் இருவரும் வெங்கடாசலபதி அன்கோ நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள்.

இந்த நிறுவனம் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தி சுப்ரமணியுடையது. இது குறித்து ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். இது தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெறும்போது பூதாகரமான ஊழல்கள் வெளிவரும்.

உலக வங்கி நிதியில் நடைபெறும் திட்டங்களில் டெண்டர் வழங்குவதில் உள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இதன் மூலம் எந்த காலத்திலும் உலகவங்கி தமிழகத்திற்கு நிதி வழங்குவதற்குத் தடைபோட்டுவிடுவார்கள். 33 அமைச்சர்களில் தலைசிறந்த ஊழல்வாதி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி.  அவரது பினாமி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் ஆதாரங்களுடன் கிடைத்துள்ளன.

மின்துறை அமைச்சரோ, வேலுமணியைக் காட்டிலும் கூடுதலாக கொள்ளையடிக்கப் போட்டி போட்டு வருகிறார். அதற்காகவே இந்த ஆட்சியை அவர்கள் பயன்படுத்துகின்றனர். குட்கா புகழ் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா விற்பனையில் 250 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார். குவாரி மூலம் 350 கோடி ஊழல், பணியிடமாற்றம் செய்வதில் 20 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

தேர்தல் மனுவில் 5 லட்சம்தான் தனது வருமானம் என்று ஓபிஎஸ் குறிபிட்டுள்ளார். ஆனால், 200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தோனேசியா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளில் முதலீடு செய்துள்ளார். 150 ஏக்கர் பரப்பில் மாந்தோப்பு ஒன்றினை திருவில்லிப்புத்தூரில் வாங்கியுள்ளார்.

மணல்மாபியா சேகர் ரெட்டியுடன் கூட்டு வைத்து ஓபிஎஸ்  கொள்ளையடித்துள்ளார். இதனை பிரதமர் மோடி தட்டிக் கேட்கவில்லை. இந்த கொள்ளையில் குறிப்பிட்ட தொகை டெல்லிக்கு செல்கிறதே அதற்குக் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

ஊழலை தடுக்கத்தான் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவர திமுக வலியுறுத்தி வந்தது. இந்த சட்டத்தை ஏற்படுத்தினாலும், அந்த அமைப்புக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை. அப்படி தலைவர் நியமித்து விசாரணை நடத்தினால் முதலில் சிறைக்கு செல்பவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்தான்.

இங்கு ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் வீடுபுகுந்துதான் திருடவில்லை. மற்றபடி எல்லா கொள்ளைகளும் நடைபெற்று வருகிறது. இதற்குத் துணை போகும் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலிட்டுக் கண்காணித்து இது தொடர்பான விபரங்களைத் தயார் செய்து வருகிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் கரன்சி எண்ணிய கைகள் கம்பி எண்ண போகிறார்கள்” என்று தனது உரையினை நிறைவு செய்தார் ஸ்டாலின்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz