அக்2. காந்தியின் பிறந்தநாள் மட்டுமல்ல; காமராஜரின் நினைவுநாளும் கூட....

Wednesday 03, October 2018, 12:48:06

சிறப்புக் கட்டுரை:

பா. ஏகலைவன்

 

இன்று காந்தி பிறந்த நாள். அதே சமயத்தில் இன்று பெருந்தலைவர் காமராஜர் இறந்த நாள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

1975 ஆம் ஆண்டில் எமெர்ஜென்ஸியைக் கொண்டு வந்த இந்திராகாந்தி, தனக்கு எதிரான தலைவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துக் கொண்டிருந்தார். ‘ஸ்தாபன காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அதில் தப்பவில்லை. அதனால், பெருந்தலைவர் காமராஜர் மிகுந்த மன வேதனையில் இருந்தார்.

அந்த நேரத்தில், இந்திரா காந்தியின் பக்கம் இருந்த மரகதம் சந்திரசேகர் மட்டும் காமராஜரைச் சந்தித்துப் பேசி வந்தார். காரணம், மரகதத்தை பெருந்தலைவர்தான் அரசியலுக்கு கொண்டு வந்தவர். மெத்த படித்த மரகதம் சந்திரசேகர் வேலையின் பொருட்டு காமராஜரை ஒருமுறை வந்து சந்தித்தார். ‘உங்களைப் போன்ற அதிகம் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும். அது தலித் சமூகத்திற்கு பேருதவியாய் இருக்கும்’ என்று கூறிய காமராஜர், அவரை அரசிலுக்குக் கொண்டு வந்தார்.

அரசியலில் படிப்படியாக உயர்ந்த மரகதம் சந்திரசேகர் பின்னாளில், இந்திராகாந்தியின் நெருங்கிய நட்பை பெற்றவராக இருந்தார். இந்த வகையில்தான் செப்டம்பர் இறுதி வாரத்தில் பெருந்தலைவரை வந்து சந்திக்கின்றார் மரகதம் அம்மா. அவரது நோக்கம் ஆசை எல்லாம், எப்படியாவது காமராஜரைச் சமாதானம் செய்து இந்திரா காங்கிரஸோடு இணைத்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்குக் காமராஜர் மறுத்து விட்டார்.

அதே நேரத்தில், ‘ஜே.பி. உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்களை எல்லாம் கைது செய்து வைத்திருப்பது சரியல்ல. ஜனநாயத்தை போற்றிய நேருவின் மகள் அப்படி செய்யவது நியாயமல்ல. அவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கின்றார். அந்த தகவலோடு டெல்லி சென்ற மரகதம் சந்திரசேகர் இந்திரா காந்தியிடம் கூறியதாகவும்…

அதன்படி முக்கியத் தலைவர்களை எல்லாம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி விடுதலை செய்து விடுவதாக இருக்கிறார் என்ற தகவலை பெருந்தலைவர் காமராஜருக்கு அனுப்பியதாகவும் தகவல்.

எப்படியோ,  நல்லது நடக்கட்டும் என்று ஆறுதல் அடைந்த காமராஜர், அக்டோபர் 2-ம் தேதி அன்று காலை முதலே மிகுந்த எதிர்பார்ப்போடு டெலிபோன் அழைப்பிற்காக  காத்திருந்தார். சொன்னபடி டெலிபோன் அழைப்பு வந்தது. அவரே எடுத்தார். மறுமுனயில் வந்தது எதிர்பார்த்திருந்த அந்தத் தகவல் அல்ல. அதைவிடக் கூடுதல் அதிர்ச்சியானது.

மூத்த அரசியல் தலைவரான ஆச்சார்ய கிருபளானியும், ராம்மோகன் காந்தியும் அன்று காலை காந்தியின் சமாதிக்கு மலர்வளையம் வைக்கச் செல்லும்போது இந்திராகாந்தியின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டார்கள் என்ற அந்தத தகவல்தான் பெருந்தலைவருக்கு தொலைபேசி வாயிலாக  வந்தது.

இதில் கிருபளானி நேருவே பெரிதும் மதித்த தலைவர். தனக்குக் குழந்தை பிறந்தவுடன் அதை கிருபளானியிடம்தான் நேரு எடுத்துச் சென்றார். பெயர் சூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர்தான் மடியில் வைத்து கொஞ்சியபடி, ‘இந்திரா’ என பெயர் சூட்டினார். பிறகு என்ன நினைத்தாரோ, ‘நீங்கள் உங்கள் மகள் பேரில் எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் எனத் தெரியும்’ என சொன்னபடியே, ‘இந்திரா பிரியதர்ஷினி’ என்று பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தார்..

அப்படி பெயர்சூட்டி வளர்ந்த இந்திராதான் பின்னாளில் அதே கிருபளானியையே அக்டோபர்-2 காந்தி பிறந்த நாளில் சமாதிக்கு சென்றவரைக் கைது செய்தார். இந்தத் தகவலை கேட்ட காமராஜருக்கு அதிர்ச்சி. ஏற்கனவே கைது செய்திருப்பவர்களை விடுவிப்பதாக சொன்னவர் இப்போது மூத்த தலைவர்களையே கைது செய்திருக்கிறாரே என்ற அதிர்ச்சி.

அவரது முகம் எல்லாம் மாறுகிறது. சோர்வுறுகிறது, என்னவோ போல் ஆகிறார். அதிக சோர்வுடன், ‘இனி அவ்வளவுதான்’ என்றவரின் உடல்நிலை மாறுகிறது, மருத்துவருக்கு போன் கனெக்சன் கொடுக்கச் சொல்கிறார். கிடைக்கவில்லை. மற்றொரு மருத்துவர் ஜெயராமனுக்கு தொடர்பு போகிறது. அவர், ‘உடல் வியர்கிறதா, நெஞ்சு வலிக்கின்றதா’ என கேட்டுவிட்டு உடனே வருவதாக சொல்கிறார்.

டாக்டர் வந்தால் எழுப்பு என்றபடி படுத்த பெருந்தலைவர்  தன் உதவியாளர் வைரவனைப் பார்த்து, “அந்த விளக்கை அணைத்துவிட்டுப் போ” என்கிறார். கடைசியாகச் சொன்ன வார்த்தை அதுதான்.

பத்து நிமிடங்களுக்குள் வந்த மருத்துவர் சௌரிராஜன் தலைவரை சோதித்து பார்த்து விட்டு பதறுகிறார். அடுத்து டாக்டர் ஜெயராமன் வருகிறார். தொடர்ந்து டாக்டர் அண்ணாமலையும் வந்துவிடுகிறார். பெரும் முயற்சி எடுத்தும் முடியவில்லை. ’ஐயா உயிர் பிரிந்து விட்டதே’ என உடைந்துபோய் கதறினார்கள். டாக்டர் செளரிராஜன் ஸ்டெதாஸ்கோப்பை சுவற்றில் வீசியடித்துவிட்டு கீழே விழுந்து புரண்டார்.

காமராஜர் கடைசியாக சொன்ன வார்த்தை, ‘விளக்கை அணைத்துவிட்டு போ’ என்பதுதான். அந்த ஒரு வார்த்தை தமிழகத்திற்கும் சேர்ந்தேதான். எல்லாமும் அடங்கி விடுகிறது.

எவ்வளவு பொருத்தம்?

“தோழர்களே, எனக்கோ வயது 82. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட வயது முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகின்றேன். மரண வாக்குமூலம் கூறவேண்டியவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 இன்று காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் 2000 ஆண்டுகளில் எங்குமே நடந்ததில்லை. நமது மூவேந்த மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.

தோழர்களே, இந்த நாடு உருப்பட வேண்டும் என்றால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராஜரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சியின் மூலம் சுகம் அடையுங்கள். காமராஜரின் ஆட்சியை நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடையாது” என்று 1961 ஜீலை 9-ம் நாள் பெரியார் பேசியது எவ்வளவு பொருத்தம்!

இதற்கு முன்பு இன்னொரு சம்பவம்.

1973-திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்த நேரம். எம்.ஜி.ஆரும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கின்றது. அப்போது பெருந்தலைவர் காமராஜர் வாடிப்பட்டியில் பேசிக் கொண்டிருக்கிறார். பின் பக்கம் இருட்டில் ஏதோ கூட்டம் நகர்கிறது. சலசலப்பு. என்ன ஏது என்று கேட்கிறார். ‘ஒன்றுமில்லை ஐயா. எம்.ஜி.ஆர் கூட்டமாக போகிறார்’ என்று கூறியிருக்கிறார்கள்.

ஹஹஹா என பலமாகச் சிரித்த காமராஜர், ‘போங்க போங்க, கூத்தாடி பின்னாடி போங்க. அந்த கூத்தாடி அவருக்கு பின்னாடி கூத்தியாள்கிட்டதான் நாட்டை கொடுத்துவிட்டு போவாரு’ என்று சொல்லி சிரித்தார். இது எல்லாம் ஓப்பன் மைக்கில் நடக்கிறது. பொதுவாக காமராஜர் இப்படி எல்லாம் பேசக்கூடியவர்  அல்ல. ஆனால், திடீரென்று அப்படி பேசிச் சிரித்தார்.

பின்னாளில் அதுதான் நடந்தது.

யோகியைப் போல், துறவியைப் போல் அரசியலில் இருக்கும் மனிதர்கள், அவரையும் அறியாமல் சொல்லுகின்ற சொல்கூட அறச் சொல்லாக மாறிவிடுகிறது என்பதற்கு மாமனிதர் காமராஜரின் மேற்கண்ட இரண்டு சம்பவங்களே பொருத்தம்.

பெருந்தலைவரின் இந்த நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz