மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் தி.மு.க. தலைவர் கருனாதியினைச் சந்தித்துவிட்டு வெளிவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா ஆராதித்து மகிழ்ந்த தம்பி கருணாநிதி” என புகழாரம் சூட்டினர்.
“கருணாநிதி நலிவுற்றிருப்பதை அறிந்து இரு மூன்று தினங்களாக உறக்கமின்றி கண்ணீர் வடிக்கிறேன். அசைவற்று அவர் படுத்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.கடைசி நம்பிக்கை அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர். மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை திமுக தலைவர் கருணாநிதி; அவரின் உடல்நலம் குன்றியிருப்பதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன்.
தமிழகத்திற்கு என்னை அறிமுகம் செய்தவர் கருணாநிதி, தாலி எடுத்துக் கொடுத்து எனது திருமணத்தை நடத்தி வைத்தவர். நலம் பெற்று வருக!- புதியபலம் பெற்று வருக! - எங்கள்குலம் காக்க வருக!- எம்நிலம் காக்க வருக! நீ வருவாய் எனக் கண்ணீருடன் காத்திருக்கிறேன்.
விரல் தேய எழுதியவர், குரல் தேய பேசியவர், கால் தேய நடந்தவர் கருணாநிதி. சிங்கம் போல் அவர் மீண்டும் எழுந்து வர காலனை யாசிக்கிறேன்” இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.